இங்கிலாந்து அரண்மனையைச் சேர்ந்த ராயல் மின்ட் நிறுவனம், கடந்த ஆண்டு தீபாவளிக்கு மகாலட்சுமி உருவத்துடன் தங்கக் கட்டியை வெளியிட்டது. அது மிகுந்த வரவேற்பு பெற்ற நிலையில், இம்முறை வரும் ஆகஸ்ட் 31ம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் உருவம் பதித்த தங்கக் கட்டியை தயாரித்து வெளியிட்டுள்ளது. 20 கிராம் கொண்ட இந்த 24 காரட் தூய தங்கக்கட்டியின் விலை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 543 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வலைதளம் வாயிலாக பணம் செலுத்தி தங்கக் கட்டி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாலட்சுமி உருவம் பொறித்த தங்கக் கட்டியை வடிவமைத்த எம்மா நோபல் தான் இந்த விநாயகர் உருவத்துடனான தங்கக் கட்டியையும் வடிவமைத்துள்ளார். வேல்ஸ் பிராந்தியத்தில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோயிலைச் சேர்ந்த நிலேஷ் கபாரியா வடிவமைப்பிற்கு உதவியுள்ளார். ‘விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டியை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்’ என ராயல் மின்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.