ஜவுளி தொழிலில் பிரபல நிறுவனமான ‘ரேமண்ட்’, விண்வெளி, பாதுகாப்பு மற்றும் மின்சார வாகன உதிரிபாகங்கள் வணிகத்தில் இறங்கிஉள்ளது. பெங்களூரைச் சேர்ந்த ‘மைனி பிரெசிஸன் புராடெக்ட்ஸ்’ நிறுவனத்தின், 59.25 சதவீத பங்குகளை, 682 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தவுள்ளதாக, ரேமண்ட் அறிவித்துள்ளது.
விண்வெளி, மின்சார வாகனம் மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்து இயங்கி வரும் இந்நிறுவனத்தை கையகப்படுத்துவதன் வாயிலாக, ஏற்கனவே பொறியியல் துறையில் உள்ள தனது வணிகம் மேலும் வலுப்பெறும் என்று, ரேமண்ட் தெரிவித்துள்ளது. ரேமண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான ஜே.கே.பைல்ஸ்., மற்றும் ‘ரிங் பிளஸ் அக்குவா’ ஆகியவற்றின் வாயிலாக இந்த கையகப்படுத்துதல் நடக்கவுள்ளது.
இதன் பிறகு இந்த மூன்று நிறுவனங்களும் இணைக்கப்பட்டு, ‘நியூகோ’ என்ற பெயரில் புதிய நிறுவனம் தொடங்கப்படவுள்ளது. மைனி நிறுவனத்தின் நிறுவனர் கௌதம் மைனி இந்நிறுவனத்துக்கு தலைமை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துல்லியமான பொறியியல் தயாரிப்புகளில் ஈடுபடவுள்ள இந்நிறுவனத்தின் 66.30 சதவீத பங்குகளை ரேமண்ட் நிறுவனம் வைத்திருக்கும். கடந்த சில ஆண்டுகளாக ரேமண்ட், அதன் வணிகங்களை மாற்றியமைத்தும், புதிய வணிகங்களில் முதலீடு செய்தும் வருகிறது. அதன் நுகர்வோர் பராமரிப்பு வணிகத்தை நடப்பாண்டு தொடக்கத்தில், ‘கோத்ரேஜ்’ நிறுவனத்துக்கு விற்றது குறிப்பிடத்தக்கது.