கிட்டூர் ராணி சென்னம்மா
பாரதத்தின் முதல் சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே, ஆங்கிலேயரை எதிர்த்து வீரமுடன் போரிட்ட வீரமங்கை கிட்டூர் ராணி சென்னம்மா. இளம் பருவத்திலேயே, குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில்வித்தை என அனைத்து போர் கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். இவரது, துணிச்சல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சமஸ்கிருதம், கன்னடம், மராட்டி, உருது மொழிகளைக் கற்று அதில் நிபுணத்துவம் பெற்றார். 1816-ல் கணவரையும், 1824-ல் ஒரே மகனையும் இழந்தார். தனது உறவினரின் குழந்தையான சிவலிங்கப்பாவை தத்தெடுத்து அவனுக்கு முடிசூட்டினார். கிட்டூர் ராஜ்ஜியத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்ற முயன்றனர். நேரடி வாரிசு இல்லாத சாம்ராஜ்ஜியம் என குற்றம் சுமத்தி, சென்னம்மாவின் தத்துப்பிள்ளையான சிவலிங்கப்பாவை நாடு கடத்த ஆங்கிலேயர்கள் முயன்றனர். இதையடுத்து, ஆங்கிலேயர்கள் பெரும் படையுடன் திரண்டு வந்து, கிட்டூர் ராஜ்ஜியத்தை முற்றுகையிட்டனர். துணிச்சலுடனம், வீரத்துடனும் போரிட்டு ஆங்கிலேயப் படையை மண்டியிட வைத்தார். ஆங்கிலேயப் படையில் மிகப்பெரிய உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தினார். சூழ்ச்சியின் காரணமாக, சென்னம்மா சிறைபிடிக்கப்பட்டு, தனது 51-வது வயதில் சிறையிலேயே (1829) இயற்கை எய்தினார்.
தில்லையாடி வள்ளியம்மை
பாரதத்தில் இருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு பணிக்குச் சென்ற பாரதியர்களை, வெள்ளையர்கள் கொடுமைப்படுத்தினர். வெள்ளையர்கள் படிக்கும் பள்ளியில், பாரத நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் படிக்க தடை, ஒன்றாக பேருந்தில் பயணம் செய்ய தடை, வாக்குரிமை மறுப்பு மற்றும் பாரதியர்களுக்கு மூன்று பவுன் தலைவரி என பல்வேறு அடக்குமுறை சட்டங்கள் அமலில் இருந்த காலம். தென்னாப்பிரிக்காவில் வாழ்பவர்கள் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்ய வேண்டும், மீறினால் அவர்களது திருமணங்கள் செல்லாது என்று ஆங்கிலேயர்கள் அறிவித்தனர். இதனால் பாரதியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். ஏற்கனவே, திருமணமான பாரதிய பெண்கள் சட்டப்பூர்வமான மனைவி என்கிற உரிமையை இழக்கும் நிலைமை ஏற்பட்டது. இப்படி, ஆங்கிலேயர்கள் செய்த அட்டூழியங்களுக்கு எதிராகப் போராடியவர்களில் மிக முக்கியமானவர் தில்லையாடி வள்ளியம்மை. இவர், காந்தியுடன் இணைந்து பல்வேறு அறப்போராட்டங்களை மேற்கொண்டு, ஆங்கிலேயர்களின் கொடுமையால் 22.02.1914ல் காலமானார். 1934ல், தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காந்தி, வள்ளியம்மையின் தீரத்தை பல்வேறு பொதுக் கூட்டங்களில் பேசியுள்ளார்.
ருக்மிணி தேவி அருண்டேல்
சமூகத்தில் ஒரு பிரிவினர் மட்டுமே ‘’சதிர்’’ எனும் நடனத்தை பயின்று வந்தனர். இக்கலையை, அனைவரும் கற்றுக் கொள்ளும் வகையில், அதற்கு ‘பரத நாட்டியம்’ என்று பெயரிட்டு, முனைப்புடன் செயல்பட்டவர் ருக்மிணி தேவி அருண்டேல். அக்காலத்தில் புகழ்பெற்ற தேவதாசியான, மயிலாப்பூர் கௌரி அம்மாவிடம் இருந்து சதிர் நடனத்தை இவர் கற்றார். ‘’கலாசேத்திரா’’ எனும் பெயரில் கலைப்பள்ளி ஒன்றை துவக்கினார். தனது பள்ளியில் பயிலும் மாணவ, -மாணவிகளுக்கு கற்பிக்க, தமிழகத்தின் தலை சிறந்த இசைக் கலைஞர்களையும், நாட்டியக் கலைஞர்களையும் அழைத்தார். பாரத நாடாளுமன்றத்தின் முதல் மேலவை உறுப்பினர் என்ற பெருமைக்குரியவர். ‘’விலங்குகள் வதைத் தடுப்புச் சட்ட முன்வரைவு’’ தாக்கல் செய்ய முக்கிய காரணமாக இருந்தார். 1977ல், அன்றைய பாரத பிரதமர் மொரார்ஜி தேசாய், ருக்மிணி தேவியை குடியரசுத் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அழைத்தார். கலை சார்ந்த பணிகளில் மட்டுமே தமக்கு விருப்பம் இருப்பதாக கூறி, தன்னைத் தேடி வந்த பதவியை ஏற்க மறுத்தார். 1986 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று மறைந்தார்.