விடுதலை புலிகள் இயக்கத் தொடர்பு, சட்டவிரோத நிதி குறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

சென்னையில் உள்ள அலுவலகத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் 10 மணி நேரத்துக்கு மேலாக தீவிர விசாரணை நடத்தினர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே போலீஸார் கடந்த 2022மே 20-ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த பொறியாளர் சஞ்சய் பிரகாஷ், கிச்சிபாளையத்தை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி நவீன் சக்கரவர்த்தி ஆகியோரிடம் இருந்து 2 துப்பாக்கிகள், தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. செட்டிச்சாவடி பகுதியில்வீட்டை வாடகைக்கு எடுத்து யூ-டியூப் உதவியுடன் அவர்கள் துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களது கூட்டாளி அழகாபுரத்தை சேர்ந்த கபிலன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு ‘க்யூ’ பிரிவுக்கும்,பின்னர், தேசிய புலனாய்வு முகமைக்கும் (என்ஐஏ) மாற்றப்பட்டது. சிறையில் இருந்த சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோரிடம் என்ஐஏ அதிகாரிகள் 7 நாட்கள் விசாரணை நடத்தினர். இருவரும் தடைசெய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் என்பதும், தமிழகத்தில் அதற்கு இணையாக ஓர் அமைப்பை நிறுவி ஆயுத போராட்டம் நடத்த திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களுடன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் தொடர்பில் இருந்ததும் கண்டறியப்பட்டது.

வெளிநாடுகளில் வசிக்கும் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களிடம் இருந்து தமிழகத்துக்கு சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் நிதி வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கு சொந்தமான 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த 2-ம் தேதி சோதனை நடத்தினர்.

சென்னை கொளத்தூர் பாலாஜி நகரில் உள்ள பாலாஜி வீடு, திருச்சி சண்முகா நகரில் வசிக்கும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரான பிரபல யூ-டியூபர் சாட்டை துரைமுருகன் வீடு, கோயம்புத்தூர் மாவட்டம் ஆலாந்துறை அடுத்த ஆர்.ஜி.நகரை சேர்ந்த ரஞ்சித்குமார் வீடு,கோயம்புத்தூர் காளப்பட்டி அருகே உள்ள சரஸ்வதி கார்டன் பகுதியை சேர்ந்த முருகன் வீடு, தென்காசி மாவட்டம் சிவகிரி அடுத்த விஸ்வநாதபேரியை சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் வீடு, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அடுத்த பகைவரை வென்றான் கிராமத்தை சேர்ந்த செய்தி தொடர்பாளர் விஷ்ணு ஆகியோரது வீடுகளில் சோதனை நடைபெற்றது.

இதில், ஒரு லேப்டாப், 7 செல்போன்கள், 8 சிம்கார்டுகள், 4 பென்டிரைவ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. புலிகள் இயக்கம் தொடர்பான சட்ட விரோத புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பான விசாரணைக்காக சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவர்கள் 6 பேருக்கும் என்ஐஏ அதிகாரிகள் சம்மன் வழங்கினர். கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் என்பவருக்கும் சம்மன் வழங்கப்பட்டது.

இந்நிலையில், சாட்டை துரைமுருகன், மதிவாணன், முருகன் ஆகியோர் நேற்று காலை 10 மணிஅளவில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் தங்களது வழக்கறிஞர்களுடன் ஆஜராகினர். அவர்கள் 3 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் தனித்தனியாக விசாரித்தனர். சட்ட விரோத நிதி பெற்றது உண்மையா, அப்படி நிதி பெற்றிருந்தால் அது எதற்காக, எந்த வகையில் அந்த நிதி பயன்படுத்தப்பட்டது என்று பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகளில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்துள்ளனர். இந்த விசாரணை 10 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. 3 பேரும்அளித்த பதில்கள் வீடியோ பதிவாகவும், எழுத்து வடிவிலும் வாக்குமூலமாக பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் சிலரிடம் விசாரிக்க வேண்டி உள்ளது. அதன் பிறகே, குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை குறித்து தெரியவரும் என்று என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.