விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு – தமிழருக்கு பாராட்டு

நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை மதுரை சேர்ந்த இன்ஜினியர் சண்முக சுப்பிரமணியம் கண்டுபிடித்துள்ளார். அவர் அனுப்பிய படத்தை அமெரிக்காவின் நாசா உறுதி செய்தது. நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 கலன்களை கொண்ட சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. திட்டமிட்ட உயரத்தில் பூமியை சுற்றிவந்த சந்திரயான் 2 விண்கலம் பூமியின் மேற்பரப்பை துல்லியமாக படம் பிடித்து அனுப்பியது. நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்ட விண்கலத்தில் இருந்து ஆர்பிட்டர் கலன் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இது நிலவை சுற்றி வந்து மிக துல்லியமான படங்களை அனுப்பியது. இந்தநிலையில், உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த விக்ரம் லேண்டரை செப்டம்பர் 7ம் தேதி நிலவில் தரையிறக்கும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். அதிகாலை 1.30 மணி முதல் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து நொடிக்கு நொடி துல்லியமாக விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவ பகுதியில் தரை இறக்கும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அப்போது நிலவின் தரைப்பகுதியிலிருந்து 2 கி.மீ உயரத்தில் விக்ரம் லேண்டர் இருந்தபோது லேண்டரில் இருந்து இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்த சிக்னல்  திடீரென தடைபட்டது. தொடர்ந்து லேண்டரின் சிக்னலை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் கடுமையாக போராடினர்.
ஆனால் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் திட்டமிட்டபடி தரையிறக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க இஸ்ரோவிற்கு அமெரிக்காவின் நாசா உதவி செய்தது. இந்த நிலையில், செப்டம்பர் 10ம் தேதி விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது. ஆனால், புகைப்படம் தெளிவாக இல்லாததால் லேண்டர் விழுந்த இடத்தை துல்லியமாக குறிப்பிடமுடியவில்லை. தொடர்ந்து, நாசாவின் ஆர்பிட்டர் நிலவை சுற்றிவந்து, லேண்டரை புகைப்படம் எடுக்க முயன்றது. ஆனால் தெளிவான புகைப்படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் உள்ளதை உறுதி செய்து அமெரிக்காவின் நாசா தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய புகைப்படத்தை நேற்று வெளியிட்டது. இந்த புதிய படத்தில் லேண்டரின் பாகங்களை பச்சை மற்றும் நீல நிற புள்ளிகள் மூலம் நாசா குறிப்பிட்டு காட்டியுள்ளது. விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை துல்லியமாக கண்டரிய அமெரிக்காவின் நாசாவிற்கு மதுரையை சேர்ந்த இன்ஜினியர் சண்முக சுப்ரமணியன் என்பவர் பெரிதும் உதவியுள்ளார். இவர், செட்பம்பர் 17, அக்டோபர் 14, 15, நவம்பர் 1ல் நாசா வெளியிட்ட படங்களை ஆய்வு செய்து லேண்டர் விழுந்த இடத்தை கண்டறிந்துள்ளார்.

இதையடுத்து, விக்ரம் லேண்டர் தரை இறக்குவதற்கு முன்னாள் உள்ள புகைப்படம் மற்றும் அதற்கு பின்னால் வெளியிட்ட புகைப்படம் ஆகியவற்றை தீவிரமாக ஆய்வு செய்துள்ளார். தொடர்ந்து நான்கு நாட்களாக நாசாவின் புகைப்படங்களை ஆய்வு செய்ததை வைத்து விக்ரம் லேண்டரின் பாகங்கள் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு நாசாவுக்கு டிவிட்டர் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். சண்முக சுப்பிரமணியன் குறிப்பிட்டு காட்டிய இடத்தை நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்தநிலையில், சண்முக சுப்பிரமணியன் குறிப்பிட்டபட்டு காட்டியபடி விக்ரம் லேண்டரின் பாகங்கள் இருப்பதை நாசாவும் உறுதி செய்தது. விக்ரம் லேண்டரை துல்லியமாக கண்டறிய பெரிதும் உதவிய இன்ஜினியர் சண்முக சுப்ரமணியனுக்கு நாசா பாராட்டு தெரிவித்துள்ளது.

கண்டுபிடித்தது எப்படி?: சண்முக சுப்ரமணியன் பேட்டி

மதுரையை சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் சண்முக சுப்ரமணியன்.  இவர் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி  வருகிறார். விக்ரம் லேண்டர் இருப்பிடத்தை கண்டறிந்தது குறித்து அவர்  கூறியதாவது: நாசா தன்னுடைய இணையதள பக்கத்தில் விக்ரம் லேண்டர் குறித்த படங்களை வெளியிட்டு யார் வேண்டுமானாலும் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கலாம் என்று அறிவித்தது. நாசா வெளியிட்ட புகைப்படம் 1.5 ஜிபி அளவுடையது. அதை பதிவிறக்கம் செய்தேன். முதலாவதாக விக்ரம் லேண்டர் எங்கு  தரையிறங்க இருந்தது என்று தெரிந்துகொண்டேன். .   அதன்படி, லேண்டர் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த இடத்தை தெரிந்துகொண்டு அங்கிருந்து 2X2 சதுர கி.மீ தொலைவில் ஆய்வு செய்ய ஆரம்பித்தேன். வடக்கு திசை வழியாக லேண்டர் தரையிறங்க வந்ததால், வடக்கு திசையிலிருந்து தெற்கு நோக்கி தேடினேன். இரண்டு கம்ப்யூட்டர் மானிட்டர்களில் பழைய மற்றும் புதிய புகைப்படங்களை ஒப்பிட்டு பார்த்து வந்தேன். அப்போது ஒரு இடத்தில்  மட்டும் வித்தியாசமான நில அமைப்பு இருந்தது. அதன்படி, அந்த இடம் குறித்து  கடந்த 10 வருட புகைப்படங்களை நாசாவின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஆராய்ந்தேன்.

அப்போது, பழைய புகைப்படங்களுக்கும், கடைசியாக நாசா வெளியிட்ட புகைப்படத்துக்கும் வித்தியாசம் இருந்தது. இதையடுத்து மாறுதல் காணப்பட்ட இடத்தை குறிப்பிட்டு நாசாவிற்கு டிவிட் மற்றும் மின்னஞ்சல் அனுப்பினேன். நான் அனுப்பிய படத்தை நாசா ஆய்வு செய்தது. இந்நிலையில் இன்று காலை நான் குறிப்பிட்ட இடத்தை விக்ரம் லேண்டர் விழுந்த இடம் தான் என நாசா  விஞ்ஞானிகளும் உறுதி செய்துள்ளனர். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி  அளிக்கிறது. நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மட்டுமே படித்தவன். இதற்கு நாம் அறிவியல் தொடர்பாக படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. முதலில் எல்.ஆர்.ஓ என்றால் என்ன என்று கூட எனக்கு தெரியாது. தொடர் முயற்சி மூலம் எனக்கு வெற்றி கிடைத்துள்ளது. இதை விஞ்ஞானிகள் அல்ல, யார் வேண்டுமானாலும் செய்யலாம். இஸ்ரோவின் அழைப்புக்காக காத்திருக்கிறேன். என்னுடைய பங்களிப்பை என்னால் முடிந்த அளவுக்கு அளிப்பேன். இவ்வாறு கூறினார்.