வாராணசியில் வியாஸ் மண்டபத்தில் நடைபெறும் பூஜைக்கு தடை விதிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. கியான்வாபி மசூதி நிர்வாகத்தின் மனுமீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உ.பி.யின் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. கோயிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு இம்மசூதி முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாக புகார் உள்ளது. இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றம் உத்தரவின்படி இந்திய தொல்லியல் துறை ஆய்வுநடத்தி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இந்நிலையில் மசூதியின் ஓசுகானா ஓரத்தின் அடித்தளத்தில் சுமார் 8 அடி அகலமும், 30 அடி நீளமும் கொண்ட வியாஸ் மண்டபம் உள்ளது. இதற்கு விஸ்வநாதர் கோயில் வாயில் எண்-4 வழியாக சென்று வரும் வழி உள்ளது. இந்தமண்டபத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு கடந்த 1993-ல் தினசரி பூஜை நிறுத்தப்பட்டது. அதனை மீண்டும் தொடர அனுமதி கோரி வியாஸ் குடும்பத்தின் சைலேந்தர் குமார் பாதக், வாராணசி மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். இதனை ஏற்று அதற்கான அனுமதியை கடந்த ஜனவரி 17-ல் நீதிமன்றம் வழங்கியது. இதன்படி, கடந்த ஜனவரி 31 முதல் வியாஸ் மண்டபத்தில் 5 கால பூஜைகள் தொடர்கின்றன.
மசூதி நிர்வாகம் வழக்கு: இந்த பூஜைக்கு தடை கோரி, கியான்வாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பிப்ரவரி 2-ல் மனு தாக்கல் செய்தது. இதன் விசாரணைக்கு பிறகு பிப்ரவரி 15-ல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் வியாஸ் மண்டபத்தில் நடைபெறும் பூஜைக்கு தடை விதிக்க நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் நேற்று மறுத்துவிட்டார்.
இதுகுறித்து நீதிபதி அகர்வால் தனது தீர்ப்பில், “அனைத்து தஸ்தாவேஜ்களை ஆராய்ந்தும், இருதரப்பு வாதங்களை கேட்டும் வியாஸ் மண்டபத்தில் பூஜைக்கு அனுமதி அளிக்கப்பட்டது சரியானது என இந்த நீதிமன்றம் முடிவு செய்கிறது. எனவே அங்கு தினசரி பூஜைக்கு தடை விதிக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிறிய மண்டபம், வாராணசியின் பிரபல பரம்பரைகளில் ஒன்றான வியாஸ் குடும்பத்தின் பொறுப்பில் இருந்தது. இப்பரம்பரையின் மூத்தவரான வியாஸ், கடந்த 1936-ல் ஆங்கிலேயர் நீதிமன்றத்தில் மனு அளித்து, பூஜைக்கான அனுமதி பெற்றார். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு 1993-ல் இங்கு பூஜை செய்ய அப்போதைய உ.பி. முதல்வர் முலாயம்சிங் யாதவ் தடை விதித்தார்.
இந்த விவகாரத்தில் கியான்வாபி நிர்வாகம் கடந்த பிப்ரவரி 1-ல் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தது. இதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடும்படி உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது. இந்நிலையில் கியான்வாபி நிர்வாகம் மீண்டும் உச்ச நீதிமன்றம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.