வாக்குறுதியை மீறிய விடியல் அரசு

பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தர கோரிக்கைகளை முன்வைத்து தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், அவர்களை திடீரென பணி நீக்கம் செய்துள்ள தி.மு.க அரசிற்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பகுதி நேர ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம் என்று கொடுத்த தேர்தல் வாக்குறுதியை மறந்து இப்பொழுது அவர்களை பணிநீக்கம் செய்துள்ளது இந்த திறனற்ற தி.மு.க அரசு. ஆசிரியர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிய இந்த அறிவாலய அரசின் போக்கு கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்துள்ளார். மேலும், பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் குறித்த காணொளியையும் அதனுடன் இணைத்துள்ளார். முன்னதாக, தி.மு.க. தலைவரும் தற்போதைய முதல்வருமான ஸ்டாலின், கடந்த சட்டமன்ற தேர்தலின்போது பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியில், ‘அரசுத்துறை நிறுவனங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகப் பணியில் உள்ள அனைத்துப் பணியாளர்களும் பகுதிநேர ஆசிரியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற தனி அமைச்சகம் அமைக்கப்படும். இதற்கு, திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் என்று பெயரிடப்படும். கருணாநிதி சொன்ன வாசகம் உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கும். அது ‘சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம்’. அவர் வழியில் நானும் சொன்னதைச் செய்வேன். செய்வதை தான் சொல்வேன் என்று கூறியிருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் வழக்கம்போல தற்போது தனது வாக்குறுதியை மீறி செயல்படுகிறார். இதுதான் தி.மு.க அரசின் விடியலா? என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.