பாரத தேர்தல் ஆணையம் நாடு நெடுக நடத்தி வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்த நடவடிக்கைக்கு (எஸ்.ஐ.ஆர்) முழு ஆதரவு கொடுத்து, தேர்தல் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு தருவது ஜனநாயகம் விரும்பும் தேசியவாதி ஒவ்வொருக்கும் தலையாய கடமை என்கிறார் வழக்கறிஞர்
அ. இளங்குமார் சம்பத்.
பிஹார் மாநிலத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்த நடவடிக்கையால் (எஸ்.ஐ.ஆர்) அங்கு நல்ல முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. சிறப்பு தீவிர சீர்திருத்த நடவடிக்கை விரும்பாத சில அரசியல் கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் கட்சி, பொய் பிரச்சாரத்தால் மக்களிடையே குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வந்தது.
அந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சீர்திருத்த நடவடிக்கையின் போது, எதிர்க்கட்சியினர் நிறைய குற்றச்சாட்டுகளை கூறினார்கள். நாடு தழுவிய அளவில், தேர்தல் ஆணையத்துக்கு எதிரான பிரச்சாரம் செய்தார்கள்.
ஆனால் கடைசியில் பிஹாரில் என்ன நடந்தது? ஒரு வாக்காளர் கூட தனது பெயர் நீக்கப்பட்டதாக புகார் அளிக்கவில்லை. தகுதி வாய்ந்த எந்த ஒரு வாக்காளரின் பெயரும் நீக்கப்படவில்லை, அதேசமயம் தகுதி இல்லாத போலி வாக்காளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பதெல்லாம் தெள்ளத் தெளிவாகி விட்டது.
வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தி, உயிரோட்டமான நிலையில் வைத்திருக்கவே எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை. தமிழகத்திலும் கூட எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை எதிர்த்து, ஆளும் கட்சியுடன் சில உபரி கட்சிகள் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் செய்தன. ஆனாலும், தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்த நடவடிக்கை பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை 97.42 சதவீத படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன (26.11.25 வரை), அதாவது 6 கோடியே 22 லட்சம் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இன்று வரை 4.19 கோடி படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு, கணினியில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 65.5% படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள மொத்தம் உள்ள 68,467 வாக்குச்சாவடிகளில், 2,488ல் 100% பணிகள் நிறைவேறியுள்ளன. அதாவது 100% படிவங்கள் விநியோகிக்கப்பட்டு, திரும்ப பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மற்ற மாநிலங்களிலும், சிறப்பாக இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
இருப்பினும் காங்கிரஸ், திமுக, மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை எதிர்த்து மனு தாக்கல் செய்தன. பிஹாரை பொறுத்தமட்டில், எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையால் எந்த பிரச்சினையும் இல்லாமல், குறிப்பாக எந்த ஒரு வாக்குச்சாவடிகளிலும் மறு தேர்தல் இல்லாமல், அமைதியான முறையில் அதிக சதவீத வாக்குப் பதிவுடன் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
பிஹார் எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பு வழக்குகள் முடிக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் பழைய மனுக்களில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு அரசியல் சாஸன அங்கீகரிப்பு உள்ளதா? குடியுரிமையை தீர்மானிக்க தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உண்டா? ஆகிய கேள்விகளில் மட்டும் வழக்கு நிலுவையில் உள்ளது.
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை இப்பொழுது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தான் கொண்டு வந்தது போன்ற தவறான பிரச்சாரங்கள் பொது வெளியில் அதிகமாக இருக்கின்றது.

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு அரசியல் சாஸன அங்கீகாரம் உள்ளதா?
ஆம். பாரத அரசியல் சாஸனப்படி அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தினுடைய விதிமுறைகளின் படியே வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 பிரிவு 20ன் கீழ், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை நடந்து வருகிறது. தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் சாஸனம் வழங்கியிருக்கின்ற அதிகாரத்தின் படியும், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படியும் செய்ய வேண்டிய கடமையின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பதிவு, நீக்கம் ஆகியவற்றை வருடம் தோறும் செய்து வருகிறது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 பிரிவு 20 (3) படி, தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் படி, ஸ்பெஷல் இன்டென்சிவ் ரிவிஷன் (எஸ்.ஐ.ஆர்) நடத்த தேர்தல் ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது.
அதன் அடிப்படையிலேயே, வாக்காளர் பட்டியலை உண்மைத் தன்மையுடன், அதனுடைய நீடித்த நம்பகத்தன்மை உறுதிப்படுத்துவதற்காக தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்து வருகிறது. இது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்.
குடியுரிமையை தீர்மானிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டா?
முதலில் வாக்காளர்கள் யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். யாரெல்லாம் வாக்காளராக வாக்களிக்க முடியும் என்றால், இந்த நாட்டில் பிறந்த ஆர்டினரி ரெசிடென்ட் (Ordinary Resident) இயற்கையாக குடியுரிமை பெற்று, 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள்.
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், சில சட்டப்பிரிவுகளின் படி தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர் வாக்களிக்க இயலாது.
இந்த நாட்டிலே வசிப்பவர்கள் எல்லாரும் இந்த நாட்டு குடிமக்கள் கிடையாது. இந்த நாட்டு குடிமகன், பிறப்பாலும் தன் முன்னோர்கள் இந்த நாட்டின் குடிமக்களாக இருக்கின்ற காரணத்தாலும் அல்லது சட்டப்பூர்வமான நடவடிக்கையின் மூலமாக பதிவு வேண்டி விண்ணப்பித்து, அதன் மூலமாக குடியுரிமை பெற்றவர்கள் என்ற வகையிலும் இந்த நாட்டின் குடிமக்களாக ஆக முடியும், மற்ற யாரும் இந்த நாட்டினுடைய குடிமக்களாக ஆக முடியாது.
வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களாக யாரை சேர்க்க வேண்டும் என்கின்ற பொழுது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 பிரிவு 20 (1) ன்படி, ஒரு வாக்காளர் என்பவர் ஆர்டினரி ரெசிடென்டாக இருக்க வேண்டும். இதன் பொருள், இந்த நாட்டில் வாழக்கூடிய ஒருவர், இந்த நாட்டிலே சொத்து வைத்திருக்கிறார், வீடு வைத்திருக்கிறார் என்பதற்காக அவர் ஆர்டினரி ரெசிடென்டாக கருதப்படமாட்டார்கள்.
இந்த நாட்டினுடைய குடி மக்களுக்குத்தான் இங்கு வாக்களிக்க உரிமை உண்டு. அதைத்தான் இந்த ஆர்டினரி ரெசிடென்ட் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதை ஆர்டினரி ரெசிடென்ட் அல்லாத குடியேறிகள், முறையாக குடியுரிமை பெறாதவர்கள், இங்கே அடைக்கலம் தேடி வந்தவர்கள், சட்ட விரோதமாக ஊடுருவியவர்கள் யாரும் வாக்களிக்க இயலாது. சட்டத்திலே இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதை தவிர, ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு இறந்து போனவர்களை நீக்குவது என்பது இயல்பு. அது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடந்து கொண்டே இருக்க வேண்டும். நீக்குதலும், சேர்த்தலும் இயல்பாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இந்த சிறப்பு சீர்திருத்த நடவடிக்கையின் மூலமாக, கடந்த 10 ஆண்டுகளில் நீக்கப்படாத அதாவது இறந்து போன, நீக்கப்படாமல் இருக்கிற வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள்.
நம்முடைய மாநில தலைமை தேர்தல் அதிகாரியின் அறிக்கைப்படி, தமிழகத்தில் இதுவரை சுமார் 20 லட்சம் வாக்காளர்கள் அடையாளம் காணப்பட முடியாமல் இருக்கிறார்கள். அதாவது 20 லட்சம் வாக்காளர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று அடையாளம் காணப்பட முடியவில்லை, அதனால் அவர்களுக்கு எஸ்.ஐ.ஆர் பதிவு படிவங்களை வழங்க இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம் பெயர்ந்தவர்கள், யார் என்று தெரியாதவர்கள், இறந்து போனவர்கள், இவர்களெல்லாம் நீக்கப்பட வேண்டியவர்கள் தான், இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதில் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.

தமிழகத்தில் திமுக உள்ளிட்ட சில கட்சிகளினுடைய இன்னொரு ஓலத்தையும் நாம் கேட்க முடிந்தது. அதாவது இங்கே தொழில் செய்வதற்காக புலம் பெயர்ந்து வந்திருக்கக்கூடிய பிஹார் உள்ளிட்ட வட மாநிலத்தவர்கள், இங்கே வாக்காளர்களாக பல லட்சம் பேர் பதிவு செய்யப்பட்டால், அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு (பா.ஜ.க.விற்கு) வாக்களிப்பார்கள் என்கின்ற ஒரு கற்பனை வாதத்தை முன் வைத்திருக்கிறார்கள். தமிழனின் வாக்குரிமை பறிக்கப்படும் என்று சாமானிய மக்களிடம் குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.
இதே வாதத்தை வட மாநிலத்தவர்கள் குறிப்பாக மும்பை, டெல்லி போன்று தமிழர்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதியில், அந்த மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், இது போன்ற கேள்விகளை எழுப்பினால் என்னவாகும் என்பதை இங்கு உள்ள அரசியல் கட்சிகள் புரிந்து கொள்வதில்லை.
பிஹாரிகள் இங்கே அதிகமாக வந்து பணி செய்கிறார்கள் என்பது உண்மைதான். பிஹாரிகள், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள், ஒரிசாவை சேர்ந்த தொழிலாளிகள் இங்கே அதிக எண்ணிக்கையில் பணி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் விரும்பினால், இங்கு வாக்காளர்களாக உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பதிவு செய்ய முடியும். அவர்கள் சிலர் குடும்பத்தோடு இங்கு வந்து, பல ஆண்டுகாலமாக தங்கி இருக்கிறார்கள், சிலர் வந்து வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை கிட்டத்தட்ட 2000 படிவங்களுக்கும் குறைவாகவே புலம்பெயர்ந்த வேறு மாநிலத்தவர்கள், தங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்து இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஆக வட மாநிலத்தவர்கள் மூலமாக வாக்குத் திருட்டு என்ற வாதமும் ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

வட மாநிலத்தவர்கள் லட்சக்கணக்கான பேர் தமிழகத்தில் வாக்காளர்களாக பதிவு செய்து தமிழக மக்களின் வாக்குரிமையை பறித்து விடுவார்கள் என்ற வாதம் பொய்யானது, போலித்தனமானது, குழப்பத்தை ஏற்படுத்துவது என்பது தெளிவாக தெரிகிறது.
தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் மூலமாக, தனக்கு வழங்கப்பட்ட சட்டப்பூர்வமான நடவடிக்கையை செய்து கொண்டிருக்கிறது. அரசியல் சாஸன பிரிவு 324ன் படியும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 பிரிவு 20ன் படியும், தேர்தல் ஆணையம் அதனுடைய கடமையை செய்து கொண்டிருக்கிறது.
டிசம்பர் மாதம் 9ம் தேதி வெளியிட இருக்கின்ற வரைவு வாக்காளர் பட்டியலில், யாருடைய பெயர் இல்லையோ அவர்கள் தங்கள் பெயர்களை சேர்ப்பதற்கும், பொய்யான போலி வாக்காளர்கள், பட்டியலில் இடம்பெற்று இருந்தாலும் அதை நீக்குவதற்கும் ஏற்பாடு உள்ளது. அதற்கு உகந்த படிவங்களை பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு உள்ளது.
போலி வாக்காளர்கள் / இறந்தவர்கள் பெயர் மீண்டும் இடம்பெற்றிருந்தால், அதை நீக்குவதற்கும் வழி உள்ளது. அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் (BLA 2) இதை கவனித்து, சரி செய்ய உதவ வேண்டும்.
முகவரி மாறியவர்கள், வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தவர்கள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், தங்கள் பெயர்களை சரிபார்த்து, தங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்வதற்கு முன்வர வேண்டும். பதிவு / திருத்தம் செய்ய இணையதளத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன.
எஸ்.ஐ.ஆர் பணிக்கு முழு ஆதரவு கொடுத்து, தேர்தல் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு தருவது ஜனநாயகம் விரும்பும் தேசியவாதிகளின் தலையாய கடமை.