வரி ஏய்ப்பு செய்தோரிடம் 588 கோடி ரூபாய் வசூல்

தமிழகத்தில் 2022 -–23ம் நிதியாண்டில், வரி ஏய்ப்பு செய்தவர்களிடம் இருந்து, 588 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல கமிஷனர் பாலகிஷன் ராஜு தெரிவித்துள்ளார். இது குறித்து, பாலகிஷன் ராஜு வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாடு முழுதும் இன்று ஆறாவது ஜி.எஸ்.டி., தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், நாட்டின் ஜி.எஸ்.டி., வருவாய், 2022–23ம் நிதியாண்டில், 21 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது. அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டலத்தில் உள்ள 4.57 லட்சம் வரி செலுத்துவோரிடம் இருந்து பெற்ற வரி வருவாயில், 19 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுஉள்ளது.

கடந்த நிதியாண்டில், வரி ஏய்ப்பு செய்த நபர்களிடம் இருந்து, 588 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட 52 சதவீதம் அதிகம். மேலும், 5,771 கோடி ரூபாய் ‘ரீபண்டு’ வழங்கப்பட்டுள்ளது. இது, 2021–22ம் நிதியாண்டை விட 27 சதவீதம் அதிகம். இது தவிர, 3,000 போலி ஜி.எஸ்.டி., பதிவுகள் அடையாளம் காணப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.