வனயாத்ரா

ஆர்.எஸ்.எஸ். சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வனயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏப்ரல் 1, 2018 அன்று மாவட்டம் முழுவதுமிருந்து 3,038 பேர் பேச்சிப்பாறை அணையைச் சுற்றியுள்ள 48 மலைவாழ் மக்கள் வாழும் கிராமங்களுக்கு குழுவாரியாகச் சென்றனர். ஒவ்வொரு குழுவிலும் 50 பேர் முதல் 200 பேர் இடம் பெற்றனர். எதிர் காலத்தில் இந்த மலைவாழ் மக்களின் கல்வி, ஆரோக்கியம், கலாச்சார பாதுகாப்பு ஆகிய துறைகளில் வனவாசி மக்களுக்கு என்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆய்வையும் மேற்கொண்டனர்.

இந்த வனயாத்திரைகளுக்கான வரைவு திட்டம் 3 மாதங்களுக்கு முன்னரே தீட்டப்பட்டது. ஒரு மாதத்திற்கு முன்னரே மாவட்ட வனஅலுவலரை நேரடியாக பொறுப்பாளர்கள் சந்தித்து திட்டத்தினை பற்றி விரிவாக விவாதித்து உரிய அனுமதி கோரி இருந்தனர். அதற்கான அனுமதியை வாய்மொழியாக பெற்றதுடன், இந்த யாத்திரையை வழிநடத்த வனத்துறை அலுவலர் ஒருவரிடம் பொறுப்பளித்து மாவட்ட வனஅதிகாரி உத்தரவிட்டு இருந்தார். வாகன ஏற்பாடுகள் எந்த ஊரிலிருந்து எந்த மலைகிராமத்திற்கு செல்ல வேண்டும் போன்ற விஷயங்கள், யாத்திரை செல்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் போன்றவை முன்னரே திட்டமிடப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் ஒரு உற்சாகமான சூழ்நிலையில் வனயாத்திரை ஏப்ரல் 1 அன்று அதிகாலையில் பல்வேறு ஊர்களிலிருந்து தொடங்கி மலைகிராமங்களை நோக்கி பயணம் தொடங்கியது.

எல்லா மலைகிராமங்களிலும் இக்குழுவினரை அந்தந்த கிராம மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஊர் எல்லைகளிலிருந்து ஊர்வலமாக ஊருக்குள் அழைத்துச்சென்றனர். திட்டமிட்டபடி அந்தந்த குழுவினர் அவர்கள் சென்ற கிராமங்களில் சிறுசிறு குழுக்களாக பிரிந்து கிராமத்திலுள்ள எல்லா வீடுகளுக்கும் சென்று, அந்தந்த வீட்டிலிருந்த பெண்களை விளக்கேற்றச்செய்து அவர்களின் கலாச்சார தெய்வமான வனகாளி அம்மனைப் போற்றி நாமாவளி, பஜனை போன்ற ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டனர். இவ்வாறு கிராமத்திலுள்ள எல்லா வீடுகளிலும் நடைபெற்று அப்பகுதி முழுவதும் ஓர் ஆன்மீக மணம் கமழ்ந்தது.

அந்தந்த வீடுகளின் விபரங்களைக் கேட்டறிந்து அவர்களுக்கு சூழலுக்கேற்ப, கல்வி, ஆரோக்யம் சம்பந்தமான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. பின்னர் குழுவினருடன் கிராம மக்களும் ஒன்றிணைந்து அந்தந்த ஊர்களில் ஓரிடத்தில் திரண்டு அனுபவங்களையும் மன ஓட்டங்களையும் பகிர்ந்து கொண்டனர். வனவாசி மக்களும் பாரதியர்களே என்ற தலைப்பில் ஒவ்வொரு கிராமத்திலும் இவ்வாறு நடைபெற்ற மக்கள்சபையில் செய்தி கூறப்பட்டு, பாரில் எல்லா தேசங்களில் எங்கள் தேசம் உயர்தேசம்…” என்ற சங்கபாடல் பாடப்பட்டது. பின்னர் மலைவாழ்மக்கள் தயாரித்து வழங்கிய மதிய உணவும் யாத்திரை வந்தவர்கள் தங்களது வீடுகளிலிருந்து தயாரித்து கொண்டுவந்த உணவும் பரஸ்பரம் பரிமாறப்பட்டு, சமபந்தி போஜனம் நடைபெற்றது. இவ்வாறு நிகழ்ச்சிகளை முடித்து, வனயாத்திரைக் குழுவினர் அந்தந்த மலை கிராம மக்களிடம் பிரியாவிடை பெற்றுத் தங்களது ஊர் திரும்பினர்.

வன யாத்திரை வந்தவர்கள் மனதில் பெரிய ஒரு தாக்கத்தினை இந்த வனயாத்திரை நிகழ்ச்சி ஏற்படுத்தியது என்பதும் மலைவாழ்மக்கள் மனதில் நாம் தனியர்கள் அல்ல நம் சகோதரர்கள் பலர் சமவெளிப் பகுதிகளில் வசிக்கிறார்கள் என்ற நம்பிக்கையையும் உருவாக்கியது என்பதும் மறுக்க முடியாத உண்மை. மலைகளின் முகடுகளில் எளிய பொருட்களால் அமைக்கப்பட்ட சிறிய வீடுகளில், சாலை வசதியோ மருத்துவ வசதியோ இல்லாத குக்கிராமங்களில் வாழும் சக மனிதர்களை அதிசயமாகப் பார்த்து வியந்தனர். வனயாத்திரையில் பங்கேற்ற ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் மன பாரத்துடன், ஆண்டுதோறும் வனயாத்திரை வந்து இவர்களை சந்திக்டக வேண்டும் என்ற  எண்ணம் எழுந்தது.

மேலும் இவர்களுக்கு எல்லா விதமான உதவிகளையும் செய வேண்டும் என்று தணியாத தாகமும் வேகமும் ஏற்படுத்திய நிகழ்வாக இரண்டாவது வனயாத்திரை அமைந்தது. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஞாயிறன்று இந்த யாத்திரை நிகழ்ச்சியை நடத்த ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மக்கள் தொடர்புத்துறையும் சேவாபாரதி தென்தமிழ்நாடு அமைப்பும் உறுதியாக உள்ளது.

மலை யாத்திரை துளிகள்: வலியமலை:

 வனயாத்திரை குழுவினர் வலியமலை கிராமத்திற்குச் சென்றபோது அவர்களை கிராம மக்கள் அவர்களை வரவேற்றனர். ஊர் எல்லையில் திரண்டிருந்த கிராம மக்கள் வனயாத்திரை குழுவினரை ‘தாலப்பொலி’ என்ற பாரம்பரிய முறையில் வரவேற்று, ஊருக்குள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். வனயாத்திரை குழுவினர் சிறுசிறு குழுக்களாக பிரிந்து எல்லா வீடுகளிலும் பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடத்தினர். அதிகமான நபர்கள் (சுமார் 300 பேர்களுக்கு மேல்) அந்த கிராமத்திற்கு வந்திருந்ததால் வேகவேகமாக அதிகப்படியாகத் தேவைப்படும் மதியவிருந்து தயாரானது. பரசேரி என்ற ஊரிலிருந்து வந்த வனயாத்திரிகர்கள், தங்களுடன் கொண்டுவந்திருந்த 5 கிலோ அரிசிப்பைகளை ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்கிய போது, கொடுத்தவர்களும் வாங்கியவர்களும் கொண்ட மகிழ்ச்சியை அவர்கள் முகங்களில் காண முடிந்தது.

வலியமலை 62 கிராம மக்களின் சமுதாய பயன்பாடுகளுக்காக திருச்சி சாதனா அறக்கட்டளை சுமார் 1.5 லட்சம் ரூபாய் செலவில் ஒரு அழகிய சமுதாய நலக்கூடம் கட்டிக் கொடுத்திருந்தனர். அதன் திறப்புவிழாவும் ஏப்ரல் 1, 2018 அன்று நடைபெற்றது. வெள்ளிமலை பூஜனீய சைதான்யந்தஜி மகராஜ் ஆசிகூற ஆர்எஸ்.எஸ்.எஸின் தமிழக-கேரள செயலாளர் ராஜேந்திரன் சாதனா அறக்கட்டளையின் சார்பில், அந்த சமுதாய நலக்கூடத்தை வலியமலை கிராம வனவாசி மக்களுக்கு சமர்ப்பித்தார். நிகழ்ச்சியில் மாநில மக்கள் தொடர்பு அதிகாரி பரமேஸ்வரன், குமாரகோவில் மாளவிய வித்யா கேந்திர நிர்வாக அலுவலர் ஆ. ராஜேந்திரன், வனவாசி கல்யண் ஆஸ்ரமத்தின் திருஞானம் ஆகியோர் பங்கேற்றனர். சுமார் 85க்குமேல் குடும்பங்கள் வாழும் வலியமலை கிராமத்தில் இதுவரை ஒருவர் கூட மதம் மாறவில்லை என்பது ஒரு முக்கியமான செய்தியாகும்.

முடவன் பொற்றை

குற்றியாறு பகுதியில் அமைந்துள்ள இந்த மலைக்கிராமமானது 1998ம் ஆண்டு முதலே சங்க தொடர்பில் உள்ளது. இங்குள்ள பெருமாள் இந்தப் பகுதிமக்களை வைசூரி என்ற கொடிய நோயிலிருந்து பாதுகாத்தார் என்ற வரலாற்று உண்மையை இந்த ஊரின் 80 வயதைக்கடந்த பெரியவர் கூறும்போது அவர் பரவசம் அடைவதை கேட்பவர்கள் உணரமுடியும். வனயாத்திரை வந்தவர்களை பானகம் கொடுத்து உபசரித்து, பெருமாள் கோயிலில் அமரச்செய்து அங்கிருந்து எல்லா வீடுகளுக்கும் ஊர்மக்களே அழைத்துச் சென்றனர். அந்த ஊர்கோயிலில் பூசாரியாக உள்ள மாதவன் காணிதன், ஒருகால் இழந்த சோகத்தையும் ஊனத்தையும் தாண்டி பக்தியுடன் பூஜை செய்கிறார்.

சர்க்கரை வியாதியின் கொடுமையால் ஒரு கால் வெட்டி எடுக்கப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்து அந்த காலகட்டத்தில் சேவாபாரதி தனக்கு எவ்வாறு உதவிபுரிந்தது என்பதை கண்ணீருடன் நினைவு கூர்ந்தார். வீட்டுப் பிரார்த்தனைகளுக்குப்பின் அனைவரும் கோயிலில் அமர்ந்து சந்தித்து பின் ஊர் திரும்பினர். இந்த கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் கன்னியாகுமரி மண்டல மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் தெய்வபிரகாஷ் கலந்து கொண்டார்.

சுமார் 60 வயதான பங்கஜாட்சி என்ற பெண்மணி கடந்த பதினெட்டு வருடங்களாக அருள்வாக்கு கூறுவார். இவரது அருள்வாக்கு மலைகிராமங்களில் மட்டுமல்ல, அருகில் உள்ள கேரளாவிலும் பிரசித்தம். வனயாத்திரை அந்த கிராமத்திற்கு வந்தபோது, இவருக்கு அருள் வரப்பெற்று, வனதுர்க்கை முந்தயநாளே இவரிடம் வனயாத்திரையைப்பற்றி கூறி வரும் அனைவருக்கும் எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க கட்டளையிட்டதாகக் கூறினார்.

பேச்சிப்பாறை அணைக்கு அருகில் உள்ள பாதை வழியாக வாகனங்களில் தோட்டமலை செல்வதற்கான அனுமதியினை வனத்துறையினர் அங்கிருந்த ஒருசில பிரச்சனை காரணமாக வழங்கவில்லை. ஆனால் வனயாத்திரை குழுவினர் அதனை ஒரு பொருட்டாக எண்ணாமல் சுமார் 6 கிலோமீட்டர் நடந்து சென்று தோட்டமலை கிராமத்தை சென்றடைந்தனர். அந்த குழுவில் இடம்பெற்றிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 150 பேரும் வியக்கும் வண்ணம் தோட்டமலை கிராம மக்கள் வரவேற்பும் உபசரிப்பும் வழங்கினர்.

புறாவிளை என்ற மலைகிராமத்தில், அந்த ஊர் மக்கள் வந்தவர்களை உபசரித்து உணவு வழங்கியபின்னர் தங்களுக்கு உணவு சமைத்து கொண்டனர். பல கிராமங்களில் அந்த மக்களின் பாரம்பரிய உணவான மரவள்ளி கிழங்கும் மாங்காயும், காந்தாரி மிளகும் சேர்த்து அரைத்த ஓரு கூட்டும் வனயாத்திரை வந்தவர்களுக்கு அளிக்கப்பட்டது.

இந்த வனயாத்திரை நிகழ்ச்சியில் இருந்த உற்சாகமான சூழ்நிலை இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து இந்த நிகழ்ச்சி நடைபெறப் போகின்றது என்பதை பறை சாற்றியது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *