வந்தாள் அபிராமி; மலை மீது வருவாள் அபிராமி…
திண்டுக்கல்லின் அடையாளமாக பத்மகிரி மலை திகழ்ந்து வருகிறது. சிவபெருமானே தாமரை வடிவில் தோன்றி பிறகு சுயம்புவாக மலை வடிவத்தில் காட்சி தருகிறார் என உணர்ந்தவர் அகத்திய மாமுனிவர். அவரே இந்த பத்மகிரியை முதன் முதலாக கிரிவலம் வந்ததாக ஸ்தல வரலாறு சொல்கிறது.
சேர மன்னன் தர்மபாலர் மலைமீது ஆலயம் அமைத்தார். பத்மகிரீஸ்வரர் ஸ்ரீ அபிராமி அம்மன் திருமேனிகளை பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடத்தப்பட்டன. 1788ல் திப்பு சுல்தான் படையெடுப்பில் மலை மீதிருந்த தெய்வத் திருமேனிகள் அகற்றப்பட்டு வழிபாடுகள் நிறுத்தப்பட்டன. சுமார் 250 ஆண்டுகளாக கோயில் இருந்தும் வழிபாடு இல்லாதது மக்கள் மனதில் பெரும் வேதனையாக இருந்து வருகிறது.
இந்த இழிநிலை மாற மக்களின் ஏக்கம் தீர்க்க ஹிந்து முன்னணி களத்தில் இறங்கியது. மலையின் பெருமையை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே பல நூறு ஆண்டுகளாக நடந்து வரும் கிரிவலத்தை ஒவ்வொரு பௌர்ணமி தினத்தில் மிக சிறப்பாக நடத்த செயல்பட்டு வருகிறது.
மலைக்கோயிலில் சுவாமி திருமேனிகளை மீண்டும் பிரதிஷ்டை செய்ய மக்கள் ஆதரவை மேலும் திரட்ட முடிவு செய்தது ஹிந்து முன்னணி. திண்டுக்கல் மாநகரில் உள்ள 48 வார்டுகளிலும் கையெழுத்து இயக்கம் நடத்துவது முடிவு செய்து.
ஜூலை ௫ முதல் ௨௦ வரை கையெழுத்து இயக்கம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு தினம்தோறும் 345 பேர் வீடு வீடாக சென்று கையெழுத்துப் பெறும் பணியில் ஈடுபட்டனர்.
50,000 கையெழுத்துக்கள் பெறப்பட்டன.
ஊரில் உள்ள பெரியோர்களுக்கு பத்மகிரிமலை மற்றும் மலை கோயிலின் பெருமைகளை தெரிவிப்பதோடு கையெழுத்து இயக்கம் வெற்றி பெற்றதையும் தெரிவிக்க வேண்டும் என யோசனையானது.
வந்தாள் அபிராமி என்ற தலைப்பில் உள் அரங்கில் “சிந்தனை அரங்கம்” நிகழ்ச்சி நடத்த முடிவு செய்து ஊர் பெரியவர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 9ல் ஏற்பாடான இந்த நிகழ்ச்சியில் அழைக்கப்பட்ட பெரியவர்களில் 90 சதவீதம் பேர் வருகை தந்தனர். அம்மையப்பர் திருமேனிகள் மேடையில் அலங்கரிக்கப்பட்டு சிவ வாத்தியம் இசைக்க வழிபாட்டோடு நிகழ்ச்சி துவங்கியது.
இந்து முன்னணி தென் பாரத அமைப்பாளர் க.பக்தன் அகத்தியர் காலம் தொட்டு கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் தாத்தா உ.வே.சா வரை பத்மகிரி மலையின் சிறப்புகளை அற்புதமாக ஆதாரத்தோடு விளக்கிப் பேசினார்.
கட்டுரையாளர் :
மாநில செயலாளர், இந்து முன்னணி.