ஹிந்துக்களை வதைக்கும் வங்கதேசத்துக்கு நெருக்கடி கொடுக்க
பாரதம் வங்கதேசத்துக்கு வழங்கும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும். வங்கதேச மின்சார தேவையில் சுமார் 25 சதவீதத்திற்கு மேலாக பாரதம் வழங்கி வருகிறது. நேபாளத்தில் இருந்து வங்கதேசத்திற்கு பாரத ‘கிரிட்’ வழியாக 40 மெகாவாட் (மெகாவாட்) மின் பரிவர்த்தனைக்கு பாரதம் சில மாதங்கள் முன்பு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தை ரத்து செய்து அக்கிரம தர்பாருக்கு நெருக்குதல் தர வேண்டும்.
திரிபுராவில் இருந்து தினமும் 5,0-80 மெகாவாட் மின்சாரம் வங்கதேசத்துக்கு வழங்கி வந்த நிலையில் வங்கதேசம் அதிக மின்சாரம் கேட்டது. அங்கு பெரும் மின் பற்றாக்குறை; குறைந்தபட்சம் 250 மெகாவாட் வேண்டும் என்றது வங்கதேசம். ஆனால் மின்சார கட்டண நிலுவையான 139 கோடி ரூபாயை உடனே தரும்படி கேட்டு திரிபுரா மாநில அரசு சாட்டையை சொடுக்கியுள்ளது..
வங்கதேச பொருள்களுக்கு இறக்குமதி தடைவிதித்து, பொருளாதார நெருக்கடி கொடுக்க வேண்டும். வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி பயங்கரவாத அமைப்பு பாரதப் பொருள்களை பகிஷ்கரிக்க வேண்டும் என பிப்ரவரியில் கொக்கரித்ததை மறக்காமல், வங்கதேச பொருள்களை பாரதம் புறக்கணிக்க வேண்டும்.
பாரதம் ரூ. 34,000 கோடி அளவில் வங்கதேச ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்கிறது. அதனை அடியோடு நிறுத்த வேண்டும். ஜிகாதி வன்முறையில் சிக்கித் தவிக்கும் வங்கதேச ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க, வங்கதேச ஆயத்த ஆடை பிராண்ட்களை நாம் பகிஷ்கரிக்க வேண்டும்.
வங்கதேச கொடூரத்தை எதிர்த்து அஸ்ஸாம் மாநிலம் கொந்தளிக்கிறது. பராக் பள்ளத்தாக்கு தலைச்சுமை வணிகர்கள் சங்கம் ஹிந்து அமைப்புகளுடன் இணைந்து, உள்ளுர் கடைவீதிகளில் காணப்படும் வங்கதேச தயாரிப்புகளை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளது. சிறுபான்மை ஹிந்துக்கள் மீதான அட்டூழியங்களைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பி சனிக்கிழமை பதர்பூர் ரயில் நிலையத்திற்கு வெளியே வங்கதேச பொருட்களை மக்கள் எரித்தார்கள். “யூனுஸ் அரசே, எச்சரிக்கை! வங்கதேச ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்!” “வங்கதேசத்தில் நிலைமை சீராகும் வரை வடக்கு ஸ்ரீபூமியில் இருந்து ஏற்றுமதி – இறக்குமதி இல்லை!” போன்ற முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.
வங்கதேச சிறுபான்மை சமூகத்தினருக்கு ஆதரவாகவும் சிறைபிடிக்கப்பட்ட இஸ்கான் துறவி சுவாமி சின்மயானந்த தாஸ் பிரம்மச்சாரியை விடுவிக்கக் கோரியும், பராக் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் பிரம்மாண்ட பேரணிகள் நடத்தப்பட்டன. பிரதான நகரமான சில்சர் உட்பட பராக் பள்ளத்தாக்கின் மூன்று மாவட்டங்கள் போராட்டத்தில் குதித்துள்ளன. இதற்கிடையில், வடக்கு கரீம்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ கமலாட்சா டி புர்காயஸ்தா, ஸ்ரீபூமி பகுதியில் பாரத, வங்கதேச எல்லையில் வங்கதேச பொருட்களை எரித்து எதிர்ப்பு தெரிவித்தார்.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் கொடுமைக்குள்ளாவதை முடிவுக்குக் கொண்டுவர இது போல பல முனை முற்றுகை பெரிதும் உதவும். வங்கதேசத்தில் இருந்து வருகிறவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று மேற்கு வங்க டாக்டர்கள் அறிவித்துவிட்டார்கள். திரிபுரா மாநில டாக்டர்களும் இதுபோலவே அறிவித்துவிட்டார்கள்.
திரிபுரா மாநில ஹோட்டல் உரிமையாளர்கள் வங்கதேசத்திலிருந்து வருபவர்களுக்கு உணவு அளிக்க மாட்டோம் என்று தீர்மானித்து விட்டார்கள்.
அமெரிக்கா வாழ் ஹிந்துக்கள் வீதிக்கு வந்து வங்க தேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்களை ஒடுக்கும் வங்கதேச அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று பாரத அரசை கோரினார்கள்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் டிஜிபி உள்பட காவல்துறை உயரதிகாரிகள், டாக்டர்கள், சிந்தனையாளர்கள் 68 பேர் வங்கதேச ஹிந்துக்கள் வதைக்கப்படுவது கவலை அளிக்கிறது என்று தெரிவித்து பாரத பிரதமருக்கு கடிதம் எழுதி
யுள்ளார்கள்.
கட்டுரையாளர் : எழுத்தாளர்