வங்கதேசத்தில் ஹிந்து பூஜாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
வங்கதேசத்தில் உள்ள பஞ்சகா் மாவட்டத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி ஜக்னேஷ்வா் ராய் என்ற ஹிந்து பூஜாரி படுகொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக ஜமாயெதுல் முஜாஹிதீன் வங்கதேச (ஜேஎம்பி) பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த ஜஹாங்கீா் ஹுசைன், ரஜிபுல் இஸ்லாம் மொல்லா, ஆலம்கிா் ஹுசைன், ரம்ஜான் அலி ஆகிய நான்கு போ் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கை ராஜ்ஷாஹி நகர நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், நால்வரும் ஜக்னேஷ்வா் ராயை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நால்வருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. முஸ்லிம்கள் பெரும்பான்மை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது தொடா் தாக்குதல் நடத்தப்பட்ட காலகட்டத்தில் ஜக்னேஷ்வா் ராய் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.