ஆகஸ்ட் 5-ம் தேதி, 2019ல் லடாக் தனி யூனியன் பிரதேசம் (UT) என்ற தகுதியை மத்திய அரசு வழங்கிய போது, அந்தத் தெருக்கள் மகிழ்ச்சி கோலம் பூண்டன. சோனம் வாங்சுக் தம் கைகளை கூப்பி நன்றி தெரிவித்தார்; “30 வருடக் கனவு நனவானது” என்று பிரதமரிடம் கூறினார். லடாக்கின் மத, சமூக அமைப்புகளிடமிருந்து நன்றிக் கடிதங்கள் குவிந்தன.
ஆனால் 2025 செப்டம்பர் 24-ஆம் தேதிக்கு முன்னேறிய போது, அதே தெருக்கள் போர்க்களங்களாக காட்சியளித்தன. நான்கு உயிர்கள் பலியானது, பாஜக அலுவலகங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன, கற்கள் மற்றும் குச்சிகளுடன் கூட்டங்கள் அலைந்தன. காங்கிரஸ் கவுன்சிலர் ஸ்டான்சிங் செப்பாங் கூட்டத்தினரை ஆயுதங்களுடன் தூண்டிய காட்சிகள் வெளிவந்தன. இதனால் இக்கலவரம் ஓர் திட்டமிட்ட நிகழ்வு என்ற சந்தேகம் வலுத்தது.
நன்றியுணர்வு ஆறு ஆண்டுகளில் எப்படி வன்முறையாக மாறியது?
லடாக்கின் அடையாளப்
போராட்டப் பாதை
லடாக் தனித்த அந்தஸ்த்தை வேண்டுதல், 2019-ல் பிறந்த ஒன்று அல்ல; 1948லேயே அங்குள்ள தலைவர்கள் ஜவஹர்லால் நேருவிடம் தன்னாட்சி கோரினர். 1964ல், குஷோக் பகுலா ரின்போச்சே லடாக்கை யூனியன் பிரதேச அந்தஸ்துக்காக ஒன்றிணைத்தார். 1989ல், போராட்டங்கள் தீவிரமடைந்தன; ‘லடாக் புத்தமத சங்கம்’ (LBA) டெல்லிக்கு நினைவுப் பத்திரம் அளித்தது. 1995ல், உருவான ‘லடாக் சுயாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில்’ (LAHDC), அவர்கள் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.
லடாக்கை ஜம்மு-காஷ்மீரிலிருந்து பிரிக்க உதவக்கூடிய இ. பி. கோ. 370ல் தலையிட காங்கிரஸ் மறுத்தது. இறுதியில் மோடி அரசு 2019ல் அதை செய்து, 70 வருடக் கோரிக்கையை நிறைவேற்றியது.
யூனியன் பிரதேசத்திலிருந்து மாநில அந்தஸ்து வரை: உயர்ந்த கோரிக்கைகள்
யூனியன் பிரதேசம் (UT) அந்தஸ்து கிடைத்த பிறகு, மத்திய அரசு பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கியது. மத்தியப் பல்கலைக்கழகம், ஓட்டல் மேலாண்மை நிறுவனம், புதிய கல்லூரிகள், சாலைகள், பாலங்கள் என்று. ஆனாலும், புறநபர்கள் லடாக் நிலவளங்களை ஆக்கிரமித்து விடுவார்கள் என்ற சந்தேகம் அதிகரித்தது.
2023ல், சோனம் வாங்சக் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அவரது கோரிக்கை – “அரசியலமைப்பு பாதுகாப்புகள்”. அந்தப் போராட்டம் பெரும் ஆதரவைப் பெற்றது; ‘லே அபெக்ஸ் பாடி’ (LAB), ‘கார்கில் டெமோக்ராடிக் அலையன்ஸ்’ (KDA) ஆகியவை இணைந்தன.
2024-க்குள், பாதயாத்திரைகள், வேலைநிறுத்தங்கள் என்பன பொதுவழக்காக மாறின. கோரிக்கைகள் – மாநில அந்தஸ்து, ஆறாம் அட்டவணைச் சேர்த்தல், தனி பப்ளிக் சர்வீஸ் கமிஷன், இரண்டு மக்களவைத் தொகுதிகள் என விரிந்தன. உள்துறை அமைச்சகம் இதில் இரண்டை ஏற்றுக்கொண்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் நடந்த சந்திப்புகள், மேலும் பேச்சுவார்த்தைக்கு டெல்லி தயாராக இருப்பதாக லடாக் தலைவர்களுக்கு நம்பிக்கை தந்தன. ஆனால் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்துகொண்டிருந்த போதும், செப்டம்பர் 25-26 மற்றும் அக்டோபர் 6-ஆம் தேதிகளில், கூட்டங்கள் திட்டமிடப்பட்டிருந்த போதும், வன்முறை வெடித்தது.
சதி நிழல்
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது, கலவரத்தை ஏன் தூண்டினர் என்ற வினா எழுகிறது? லடாக் தலைவர்களுடன் பல முறை அதிகாரப்பூர்வ விவாதங்கள் நடைபெற்றதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. ஆனால் புதிய பேச்சுவார்த்தைக்கு முன்பே கூட்டங்கள் வன்முறையில் வெடித்தன. வாங்சுக் “அரப் ஸ்பிரிங்” மற்றும் நேபாள GenZ போராட்டங்களை எடுத்துக்காட்டிய வீடியோக்கள் வெளிவந்தன. இதனால் உலகளாவிய போராட்ட முறைகள் லடாக்கில் நுழைந்துவிட்டன என்ற அச்சம் வலுத்தது. அவரது சொற்கள் ஜனநாயக பேச்சுவார்த்தையை விட கிளர்ச்சியைத் தூண்டுவதுபோல் இருந்தன:
“அரசு எங்களுக்குக் ஜனநாயகத்தையும் வேலைவாய்ப்பையும் மறுத்துவிட்டது. சூழ்நிலைகள் நெருக்கடியாக வெடிக்கக்கூடும்.” இது சாதாரண போராட்டமா? அல்லது திட்டமிட்ட குழப்பத்துக்கான ஏற்பாடா?
சந்தேகத்தில் காங்கிரஸின் பங்கு
காங்கிரஸ் கவுன்சிலர் செப்பாங், ஆயுதங்களுடன் கூட்டத்தைத் தூண்டும் வீடியோ கசிந்திருப்பது இல்லாவிட்டால், இந்த வன்முறை திடீர் மக்கள் கோபமாகவே இருந்திருக்கும். பாஜக உடனே அந்தக் காட்சிகளை வெளியிட்டு, “காங்கிரஸ்–வாங்சக் கூட்டுச்சதி” என்று குற்றம் சாட்டியது.
இந்த குற்றச்சாட்டு, பரந்த அரசியல் பின்னணியைக் கண்டு வலுப்பெறுகிறது. ஏனெனில், பல தசாப்தங்கள் லடாக்-க்கு யூனியன் பிரதேசம் அந்தஸ்து தரத் தவறிய காங்கிரஸ், இன்று அதே நடவடிக்கைக்கு எதிராக எழுந்தப் போராட்டங்களில் பங்கெடுக்கிறது.
எதற்காக மாற்றம்? போராட்ட அரசியலின் பின்னணி
சோனம் வாங்சுக் “நன்றியுள்ள சீர்திருத்தவாதி”யிலிருந்து “கலவரம் தூண்டியவர்” என்ற குற்றச்சாட்டுக்குள்ளாக மாறியதற்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. அரசியல் பேராசை மற்றும் சதியின் விலை,
- அரசியல் சுரண்டல்:
உண்மையான பாதுகாப்பு கோரிக்கைகளை அரசியல் வாய்ப்புகள் கைப்பற்றின. நேபாள GenZ போராட்டம், அரப் ஸ்பிரிங் போன்ற சர்வதேச மாதிரிகளை எடுத்துக்காட்டி, வாங்சுக் லடாக் போராட்டத்தை ஜனநாயக உரையாடலாக அல்ல, புரட்சிப் போராட்டமாகக் காட்சிப்படுத்தினார்.
- காங்கிரஸின் இடம் பிடிக்கும் முயற்சி:
லடாக் தொடர்பாக நம்பிக்கையை இழந்த காங்கிரஸ், இப்போது போராட்டக்காரர்களின் பக்கம் நின்று, பாஜக உள்ளூர் பிரச்சினைகளை புறக்கணிக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்க முற்படுகிறது.
- சர்வதேச நிதி சந்தேகங்கள்:
வாங்சுக்கின் வெளிநாட்டு தொடர்புகள், நிதி ஆதாரங்கள் குறித்து சந்தேகங்கள் எழுந்தன. இதனால் லடாக்கில் நிலவும் குழப்பத்திற்கு, வெளிப்புற சக்திகளின் பங்களிப்பு இருக்கிறதா என்ற அச்சம் பெருகியது.
உற்பத்தி செய்யப்பட்ட
கலவரத்தின் விலை
செப்டம்பர் கலவரம் லடாக்கில் ஆழமான காயத்தை விட்டுச்சென்றது—நான்கு உயிர்கள் பலி, பாஜக அலுவலகங்கள் தீக்கிரை, பாதுகாப்பு வாகனங்கள் அழிவு, சமூகங்களுக்கு இடையில் ஆழ்ந்த அவநம்பிக்கை. ஒருகாலத்தில் நாட்டின் அமைதியான ஒருங்கிணைப்பின் வெற்றிக் கதையாக இருந்த லடாக், இன்று குழப்பத்தின் முகமாக மாறும் அபாயத்தில் உள்ளது.
உரையாடலா? அல்லது இடர்ப்பாடா?
மத்திய அரசு உரையாடலுக்கான தனது உறுதியை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. உயர்மட்டக் குழு தொடர்ந்து லடாக் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அமித்ஷாவின் உறுதிமொழிகள் பதிவில் உள்ளன. பல நிர்வாக கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன; அரசியல் பாதுகாப்புகள் குறித்தும் விவாதிக்க தயாராக இருப்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் பேச்சுவார்த்தை நடக்கும்போதே வன்முறை வெடித்தது;
நம்பிக்கை துரோகம் – ஒரு எச்சரிக்கை கதை
சோனம் வாங்சக், 2019ல் மோடியை நன்றி கூறியவரிலிருந்து, 2025ல் நான்கு உயிர்களை காவுகொண்ட வன்முறையைத் தூண்டியவர் என்ற நிலைக்கு மாறிய பயணம், அரசியல் பேராசையும், வெளிப்புறத் தலையீடும் எவ்வளவு ஆபத்தானது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
காங்கிரஸின் தெளிவான பங்களிப்பு, உண்மையான கோரிக்கைகள் சதிக்காக திரித்து விடப்பட்டன என்ற சந்தேகத்தை அதிகரிக்கிறது. லடாக்கின் சோகம், அதன் மக்கள் அதிகம் கேட்டது தவறல்ல, அவர்களின் கனவுகள் சுயநலத்திற்காக சுரண்டப்பட்டது. அமைதி, முன்னேற்றம் அடையக்கூடிய நேரத்தில், அந்த வாய்ப்பு நாசமாக்கப்பட்டது.
கட்டுரையாளர்: ஆர்கனைசர் செய்தியாளர் தமிழில்: ஆய்வாளர் திவ்யா இரா.கு.