ராமர் கோவில் கும்பாபிஷேகம்; ஸ்டாலின் மனைவி பங்கேற்பு?

அயோத்தியில், வரும் 22ல் நடக்கவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா பங்கேற்க விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. உ.பி., மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு அனைத்து மாநில கவர்னர்கள், முதல்வர்கள், எதிர்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி ஆகியோரை சந்திக்க ஹிந்து அமைப்பினர் அனுமதி கேட்டுள்ளனர். கூடவே, கும்பாபிஷேக அழைப்பிதழை வீடு, வீடாகச் சென்று வழங்கும் பணியையும் மேற்கொண்டு உள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீடு அமைந்துள்ள, சென்னை கோபாலபுரத்தில் வேணுகோபால்சாமி கோவில் உள்ளது.

அக்கோவிலில் கும்பாபிஷேக அழைப்பிதழை வைத்து ஹிந்து அமைப்பினர் பூஜை செய்துள்ளனர். அதன்பின், அந்த ஏரியாவில் வீடு வீடாகச் சென்று அழைப்பிதழ் வழங்கினர். இதற்கிடையில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா பங்கேற்க விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, ஆன்மிகவாதியாகவும்; தீவிர ஹிந்து பற்றாளராகவும் இருக்கிறார். அதனால், ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்குச் செல்ல விரும்புகிறார். உதயநிதியின் சனாதன ஒழிப்புப் பேச்சைத் தொடர்ந்து வட மாநிலங்களில் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புணர்வு, இதனால் குறையும் என்றும் நினைப்பதால், ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் துர்கா பங்கேற்கக்கூடும்.

இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.