ராமநாதபுரம் மாவட்டத்தில் மதமாற்றத்திற்கு எதிரான ஹிந்து எழுச்சி மாநாடு!

 

திட்டமிடப்பட்ட ஜாதிக் கலவரம்

1981-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்திலும் நெல்லை மாவட்டம் மீனாட்சி
புரத்திலும் திட்டமிட்டு ஜாதி கலவரங்கள் துவக்கப்பட்டது. அதில் ஹரிஜன சகோதரர்கள் தாக்கப்பட்டார்கள். இதன் காரணமாக ஒரு சிலரின் தூண்டுதல் பேரில் நாங்கள் ஒட்டுமொத்தமாக மதம் மாறப்போகிறோம் என்று கூறி சில அடிப்படை காரணங்களை முன்வைத்தார்கள் அவர்கள்.

கோயிலில் வழிபாடு செய்ய; குடிதண்ணீர் எடுக்க, தனிக்குவளையில் தேனீர் போன்ற தடைகளையும் குறைகளையும் முன்வைத்து பல ஆயிரம் பேர் ஹிந்து மதத்தைவிட்டு இஸ்லாம் மதத்திற்குச் செல்ல முஸ்லிம் நபர்களால் தூண்டிவிடப்பட்டார்கள். அப்பாவி ஹரிஜன சகோதரர்களுக்கு ஆசை வார்த்தையாக வளைகுடா நாடுகளில் வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறியும், பணம் கொடுத்தும் மதமாற்றத்தைத் தூண்டினார்கள். இதன் பின்னணியில் முஸ்லிம்களின் “ஜமாத் ஏ  இஸ்லாம் ஹிந்த்” போன்ற அமைப்புகள் பெரிய அளவில் இச்செயல்களை ஊக்குவித்தன என்பதே உண்மை. ஜாதி ஹிந்து. ஹரிஜன மக்களிடையே புரையோடிப் போன மனக் கசப்புகள் இந்த சதிக்குப் பின்னணியாகப் பயன்படுத்தப்பட்டன.

சதியை முறியடித்த சங்கம்

இந்த ஒட்டுமொத்த மதமாற்றத்தைக் கண்ட ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி, விரைந்து செயல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராமம் கிராமமாகச் சென்று ஹிந்து ஹரிஜன மக்களை சந்தித்து மதம்மாற்றும் சதியின் பின்னணியை விவரித்ததோடு அதனை நிறுத்த வேண்டிய அவசியத்தையும் விளக்கினர்.

ஹிந்து எழுச்சி மாநாடு

1981-ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி ராமநாதபுரத்தில் ஹிந்து ஒற்றுமை எழுச்சி மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இந்த மாநாட்டிற்கு மதுரை ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை தாங்கினார்கள். இந்த மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவரும், குவாலியர் மகாராணியுமான விஜய ராஜே சிந்தியா மற்றும் ஆன்மீக ஆன்றோர்களும் சமயப் பெரியவர்களும் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். தலைமையுரை நிகழ்த்திய மதுரை ஆதீனம் அவர்கள் “சில குறைகள் ஹிந்து மதத்தில் காணப் பட்டது உண்மை. இருந்தும் தாய் சமயத்தை துறத்தல் கூடாது. தாய் குறையுடையவள் என்று அறிந்தால் எந்த ஒருவனும் அவளை, இவள் என் அன்னை இல்லை’ எனக் கூறி துறப்பது உலகில் இல்லை. எனவே அற்ப காரணங்களுக்காக மதம் மாற முற்படுதல் நல்லதல்ல” என்று பேசினார். ஆனால், அதே நாளில் இந்த எழுச்சி மாநாட்டிற்கு சவாலாக இராமநாதபுரம் அருகில் உள்ள கூரியூரில் 70 குடும்பங்கள், அத்தியூத்து கிராமத்தில் 80 குடும்பங்கள். மேலக்கோட்டையில் 50 குடும்பங்கள், செய்யலூரில் 65 குடும்பங்கள் என ஹிந்து ஹரிஜனங்களை ஒட்டுமொத்தமாக (Mass conversion) மதமாற்றினர். தேவர், அகமுடையார், தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் ஆயிரக்கணக்கில்  இந்த  மாநாட்டில்  கலந்துகொண்டனர்.

வாஜ்பாய் வருகை

தமிழகத்தில் நடைபெற்ற இந்த மத மாற்றத்தைக் கண்டு மனம் வெதும்பிய  பாஜக கட்சியின் தேசிய தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் இராமநாதபுரத்திற்கு வருகை தந்தார்கள். இங்கு கலவரம் நடந்த இடங்களையும் முஸ்லிம்களாக மாற இருந்த கிராம மக்களையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டதோடு மட்டுமின்றி, கூரியூர் கிராமத்திற்கு வந்து கிராமப் பொதுமக்களோடும், பெரியோர்களோடும் மதம் மாறுவதால்  ஏற்படும் அபாயத்தைப் பற்றியும் ஹிந்து மதத்தில் தீண்டாமைக்கு இடமில்லை என்றும் கூறி அவர்களுடனேயே அமர்ந்து சிற்றுண்டி முடித்து அங்குள்ள மக்களிடம் பல மணிநேரம் உரையாடி பின் திரும்பினார். இந்நிகழ்ச்சியின் மூலம் மதமாற்றத்தின் தீவிரம் குறைக்கப்பட்டது.

உடுப்பி பெஜாவர் சுவாமிகள் விஜயம்

மதம் மாறுவதாக அறிவித்து இருந்த கூரியூர் கிராமத்திற்கு உடுப்பி பெஜாவர் மடத்தின் விஸ் வேஸ்வர தீர்த்த ஸ்வாமிகள் வருகை தந்தார். அவர் கிராமத்து மக்களிடம், ‘நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டபோது கிராமத்து மக்கள், “பொன்னோ பொருளோ கேட்கவில்லை. வழிபாடு செய்வதற்கு ஒரு முருகன் ஆலயம் கட்டித்தரவேண்டும்” என்று கேட்டனர். சுவாமிஜி மகிழ்ச்சியுடன் கட்டித் தருவதாகச் சொன்னார்கள். அன்றே ஆலயம் அமைப்பதற்கு திருப்பணிக் குழுவை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு அப்போதைய இராமேஸ்வரம் ஆர்.எஸ்.எஸ் விபாக் பிரச்சாரக் ஸ்ரீ கோவிந்தன்ஜியிடம் கூறினார். உடனடியாக ஸ்ரீ கோவிந்தன்ஜி திருப்பணிக் குழுவின் தலைவராக அப்போது இராமநாதபுரம் ஜில்லா சங்க சாலக்காக இருந்த அமரர் ஸ்ரீ ஆர். ஆத்மநாத சுவாமிகள் அவர்களை நியமித்தார். அதே இடத்திலேயே ௪௫,௦௦௦ ரூபாய்க்கான காசோலையை கோயில் கமிட்டியிடம் சுவாமிகள் கொடுத்து திருப்பணியினை துவக்கும்படி கூறினார்கள்.

கோயில் திருப்பணி விரைவாக முடிக்கப்பெற்று 1985-ம் ஆண்டு மகா கும்பாபி ஷேகம் நடந்தது. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலக பொதுச் செயலாளர் மானனீய அசோக் சிங்கல்ஜி, மானனீய சதானந்த காக்கடே, ஸ்ரீலஸ்ரீ சுந்தர சுவாமிகள், ஊரனடிகள் மற்றும் சதானந்த மகராஜ் ஆகியோர் புதிய ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டனர்.

ஆசை வார்த்தை கேட்டு மதம் மாறிய ஹரிஜன சகோதரர்களை மீண்டும் தாய்மதத்திற்குத் திருப்பி வருகிறோம். மதமாற்றம் என்னும் பயங்கர சதித் திட்டத்தை முறியடித்ததுடன், மீண்டும் தலைதூக்காதவாறு ஹிந்து இந்த சதித்திட்டம் இயக்கத் தொண்டர்கள் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

— கூரியூர் எஸ். நாகராஜன்

தலைவர், தேசிய தென்னை வளர்ச்சி வாரியம்

– தொடரும்.