அமெரிக்காவின் போயிங் நிறுவனம் ராணுவ பயன்பாட்டுக்கான அப்பாச்சி ஹெலிகாப்டர்களை தயாரிக்கிறது. இந்த ஹெலிகாப்டர், ‘பறக்கும் பீரங்கி’ என்றுஅழைக்கப்படுகிறது. இந்திய விமானப் படைக்காக போயிங் நிறுவனத்திடம் இருந்து ஏற்கெனவே 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டு உள்ளன. இவை சீன, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.
இதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்துக்காக போயிங் நிறுவனத்திடம் இருந்து புதிதாக 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன. இவை வரும் மே மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .
இந்த சூழலில் ஜோத்பூர் ராணுவ முகாமில் நேற்று ராணுவத்தின் முதல் அப்பாச்சி ஹெலிகாப்டர் படைப்பிரிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் பீரங்கிஅழிப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கும். அப்பாச்சி ஹெலிகாப்டர்களால் ஒரு நிமிடத்தில் 128 இலக்குகளை தாக்கி அழிக்க முடியும். இரவிலும் எதிரிகளை அடையாளம் கண்டு தாக்குதல் நடத்த முடியும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.