ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக ராப்ரி தேவி, மிசா பாரதிக்கு சம்மன்

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெறப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, அவரது மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2004 – 2009-ல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ராஷ்ட்ரிய ஜனதா தளம்தலைவரும், பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது பிஹாரைச் சேர்ந்த சிலருக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தர லாலு குடும்பத்தினர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து கடந்த ஆண்டில் லாலு பிரசாத் யாதவ், மனைவி ராப்ரி தேவி,மகள் மிசா பாரதி ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது. இதனிடையே இந்த வழக்கில் முன்னாள் முதல்வராக இருந்த ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி மற்றும் சிலர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் (பிஎம்எல்ஏ) அம லாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த சிறப்புநீதிபதி விஷால், ராப்ரிதேவி, மிசாபாரதி உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி வரும்பிப். 7-ல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். ராப்ரி தேவி, மிசா பாரதி தவிர வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஹேமா யாதவ், ஹிருதயானந்த் சவுத்ரி, தொழிலதிபர் அமித் காயல் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.