ம.தி.மு.கவை தி.மு.கவுடன் இணைத்துவிடலாம்

வை.கோ தலைமையிலான ம.தி.மு.க கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, வை.கோவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “குளித்தலையில், நானும் சிலரும் ம.தி.மு.கவை உடைக்க எண்ணியதாக நீங்கள் பேசியுள்ளீர்கள். ம.தி.மு.கவின் தற்போதைய செயல்பாடுகள் வருத்தம் அளிக்கிறது. ம.தி..முக துவக்கப்பட்ட காலத்தில் வை.கோவின் வாரிசு அரசியலுக்கு எதிரான உணர்ச்சிமிகு உரைகளை கேட்ட லட்சக்கணக்கான தொண்டர்கள், அவரது பேச்சில் உறுதியும், உண்மையும் இருக்கும் என்று நம்பி வை.கோவை ஆதரித்தனர். ஆனால் வை.கோவின் குழப்பமான அரசியல் நிலைப்பாடு காரணமாக, வை.கோவை ஆதரிப்பதற்காக தி.மு.கவில் இருந்து பிரிந்து வந்த பெருவாரியான முன்னணி தலைவர்களும், தோழர்களும் ம.தி.மு.கவை விட்டு படிப்படியாக வெளியேறி மீண்டும் தி.மு.கவிற்கே சென்று விட்டனர். வை.கோவிடம் நேர்மையும், உண்மையும் இருக்குமானால், ஒவ்வொரு வார்டுகளிலும் உறுப்பினர்களாக புதுப்பித்துக் கொண்டவர்களையும், புதியதாக சேர்க்கப்பட்டவர்களின் பெயரையும் ஆதார் எண்ணுடன் இணைத்து சங்கொலி பத்திரிகையில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் உங்கள் குடும்ப மறுமலர்ச்சிக்காகவே செயல்பட்டுக்கொண்டு உள்ளீர்கள். தனது மகனை ஆதரித்து அரவணைப்பதும் சந்தர்ப்பவாத அரசியலும் பொதுவெளியில் ம.தி.மு.கவினரை தமிழக மக்கள் எள்ளி நகையாட வைத்துவிட்டது. இதனை வை.கோ இன்னமும் உணராமல் உள்ளது வருந்தத்தக்க வேதனை. கடந்த 30 ஆண்டுகளாக வை.கோவின் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள், மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க ம.தி.மு.கவை அதன் தாய் கழகமான தி.மு.கவுடன் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது” என கூறியுள்ளார். இடற்கு பதில் அளித்துள்ள வை.கோவின் மகனான துரை,  ‘அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமியின் கடிதத்தை புறக்கணிக்க வேண்டும், பொதுக்குழுவில் பேச வேண்டியதை பொதுவெளியில் வெளியிடுவது முறையல்ல, அவர் சிலரின் தூண்டுதலின் பேரில் கடிதம் எழுதியுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.