தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க செயல்வீரர்கள் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் பா.ஜ.க வெற்றி பெறும். எல்லா இடங்களிலும் களம் முழுவதுமாக மாறிவிட்டது. நாம் கூண்டுக்குள் இருக்கும் கிளி போன்று பார்க்க கூடாது. திடீரென கூண்டை திறந்து விட்டால், அந்த கிளி யோசிக்கும். திடீரென பறந்து போ என்றால் எப்படி பறக்கும்? அதனால்தான் தமிழகத்தில் ஆக்ரோஷமாக சில உரையாடல்கள் நடந்து கொண்டுள்ளன. அந்த கிளி பறக்க முடியும், கூண்டு திறக்கப்பட வேண்டும், அந்த கிளி எதற்கும் தயாராக இருக்கும் என்று நம்புகிறேன். கூண்டைவிட்டு வெளியில் வர நீங்கள் தயாராக வேண்டி இருக்கும். பறப்பதற்கு சக்தி இருப்பதாக நம்ப வேண்டும். நம்மால் முடியும் என்று நம்பிக்கை வந்து விட்டால், புரட்சி தானாக வரும். யார் உங்களை கூண்டுக்கிளி என்று சொன்னாலும் நம்பாதீர்கள். நீங்கள் கூண்டு கிளி அல்ல. 30 ஆண்டுகள் ஆனதால் பறக்க முடியாது என்பது அல்ல. பறப்பதற்கு தயாராக இருந்தோம். கூண்டில் இருந்து எப்போது பறக்கலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தோம். இப்போது பறக்கப் போகிறோம். அதற்கான நேரம் வந்து விட்டது. நிச்சயமாக மாற்றம் நடக்கும். தமிழகத்தில் அரசியல் புரட்சிக்கான நேரம் இது. நமக்கான நேரம் வந்து விட்டது. ஒரு நேர்மையான, நெஞ்சுரம் மிக்க பாதையில் பயணம் செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும். சாதனைகளை கூறி ஓட்டு கேட்போம். நம் அரசியல், தமிழகத்தில் உள்ள ஊழல் அரசியலுக்கு எங்கும் பொருந்தாதது, எதிலும் ஒட்ட முடியாது. பாலும் தண்ணீரும் கலந்தால் பாலுக்கும், தண்ணீருக்கும் மரியாதை இருக்காது. ஆனால் பால் தனியாக இருந்தால் பாலுக்கு ஒரு மரியாதை, தண்ணீர் தனியாக இருந்தால் தண்ணீருக்கு ஒரு மரியாதை இருக்கும். எனவே, நமது பாதை தனிப்பாதையாக இருக்க வேண்டியது அவசியம். மோடியின் பாதை எப்போதும் சிங்கப் பாதைதான். இதுதான் நம் பாதை என்பது புரியும்போது தமிழகத்தில் அதிகார மாற்றம், அரசியல் மாற்றம் நிச்சயம் நடக்கும். நம் காலகட்டத்திலேயே இதனை நாம் நடத்தி காட்டப்போகிறோம். 2024, 2026 தேர்தல்களிலும் இது நடக்கும்” என கூறினார்.