இந்தியா டுடே செய்தி நிறுவனம், சிவோட்டர்ஸ் உடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், ‘பிரதமர் மோடிக்கு மக்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. பிஹார் மாநில அரசியல் குழப்பங்கள் மோடிக்கு எந்தவித பெரிய பின்னடைவையும் ஏற்படுத்தவில்லை. வரும் 2024 மக்களவைத் தேர்தலிலும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெற்றி பெறும், 286 இடங்களை கைப்பற்றும், பிரதமர் நரேந்திர மோடிதான் நாட்டில் மிகப் பிரபலமான அரசியல்வாதியாகத் திகழ்கிறார். வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் நரேந்திர மோடியே பிரதமராக வர வேண்டும் என சுமார் 53 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்’ என்று தெரியவந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையிலும் பிரதமருக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவே இதன் மூலம் உறுதியாகியுள்ளது. மேலும், பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருந்தாலும் அவருக்கு வெறும் 9 சதவீத மக்கள் மட்டுமே ஆதரவு அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவாக உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.