சமீபத்தில் பணி ஓய்வுபெற்ற ஒரு ஆங்கிலப் பேராசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கேள்வி கேட்டேன். பட்டப்படிப்பு முடிப்பவர்களுக்கு ஆங்கில மொழியில் இருக்கும் மொழி ஆளுமை, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைக்கும் தற்போதைய நிலைக்கும் உள்ள மாறுபாடு என்ன என்று கேட்டேன். அதற்கு ‘அவர் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்’ என்றார். அதிர்ச்சியளித்த விஷயம் என்னவென்றால் ஆங்கில மொழியில் அவர்களுக்கு உள்ள புலமை வீழ்ச்சி அடைந்துள்ளது என்றார். அவர் மட்டுமல்ல, கல்லூரிகளுக்கு வேலைக்காக வளாக நேர்முகத் தேர்வு நடத்தச் செல்பவர்கள், பொறியியற் கல்லூரி விரிவுரையாளர்கள், பல்வேறு நிறுவன மேலாளர்கள் போன்றோரின் கருத்தும் இதுவாகவே உள்ளது.
கிராமம், நகரம் என்ற வித்தியாசம் இல்லாமல் ஆங்கில வழி மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி எனப் புற்றீசல் போல் பள்ளிகள் தோன்றிவிட்ட இந்த நாளில், கூலித் தொழிலாளியின் குழந்தையும் ஆங்கில வழியில் கல்வி பயிலும் போது எப்படி வந்தது இந்த வீழ்ச்சி?
1983ல் ஐஐடி நுழைவுத் தேர்வில் நான் கலந்து கொண்டபோது ஆங்கில மொழித் தேர்வுதான் மிகவும் கடினமானதாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐஐடி நிர்வாகம் அந்த ஆங்கில மொழித் தேர்வை நீக்கிவிட்டது. உலகத் தரம் வாந்த பொறியியல் கல்லூரியான ஐஐடியில் தற்போது பயிலும் மாணவர்களிடம் பேசும்போது அவர்களுடைய ஆங்கில மொழி அறிவும் மிகவும் தாழ்ந்துள்ளதைக் காண முடிகிறது. ஆனால் அவர்களுடைய பொறியியல் அறிவில் குறையேதும் இல்லை.
ஏன் இந்த வீழ்ச்சி? சிறிது சிந்திப்போம். அந்தக் காலத்தில் ஆரம்பப் பள்ளியில் தாய் மொழியாம் தமிழைத்தான் முதலில் கற்றோம். பெற்றோரிடமிருந்தும் சுற்றத்தாரிடமிருந்தும் கற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கான வார்த்தைகளின் ஜாலங்களையும் குழந்தையாய் இருந்தபோது அறிந்து கொண்டோம். எழுத்துப் பிழையை ஆசிரியர் பொறுத்துக் கொள்ளமாட்டார். இலக்கணச் சுத்தமாகத் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டோம். ஒரு மொழியை எவ்வாறு பயில வேண்டும் என்ற கற்பனையுடன் 3 அல்லது 6ம் வகுப்பில்தான் நாம் ஆங்கிலம் கற்கப் புகுந்தோம். மொழிக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை மனதில் இருந்ததால், மேல் வகுப்பிலோ கல்லூரி செல்லும் போதோ ஆங்கிலத்தைத் திருத்தமாகக் கற்றுக்கொண்டோம். உயர்திரு அப்துல் கலாம் போன்றோர் உச்சத்தையும் தொட்டனர்.
அதிகம் வார்த்தைகள் அறிந்திராத அன்னிய மொழியை ஆரம்பத்திலேயே கற்கும் குழந்தைகள் மொழியைத் திருத்தமாகப் பயிலுவது என்பது அபத்தம். தாய் மொழிக்கும் முக்கியத்துவம் இல்லை. இந்த நிலையில் அவர்கள் எந்த மொழியிலும் புலமையற்ற கற்காலத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளார்கள். இந்த அவலத்துக்கு யார் பொறுப்பு. நம் அடி மனத்தில் மண்டியிருக்கும் அடிமைத்தனம் அல்லாமல் வேறு என்ன? உலகில் நம்மைத் தவிர வேறு எந்த நாடும் சமுதாயமும் பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் இந்தக் காரியத்தைச் செய்வாரோ? சுத்த பைத்தியக்காரர்களாகி விட்டோம்.
என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?