மொபைல் போன், கார், கம்ப்யூட்டர்களுக்கு வெளிநாடுகள் தயவு வேண்டாம் இனி

குஜராத் மற்றும் அசாமில் புதிய ‘செமி கண்டக்டர்’ எனப்படும் மின்னணு சாதனங்களுக்கான ‘சிப்’ தயாரிக்கும் ஆலைகளுக்கு,பிரதமர் நரேந்திர மோடி ( 13.2.2024) அடிக்கல் நாட்டினார். இந்த துறையில் உலகின் சக்தியாக வெகு விரைவில் இந்தியா மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மொபைல் போன், கம்ப்யூட்டர் உட்பட அனைத்து மின்னணு சாதனங்கள், கார்கள் முதல் ராக்கெட் வரை என, பலவற்றும் செயல்படுவதற்கு, அவற்றில் உள்ள செமி கண்டக்டர் எனப்படும் சிப் என்ற சிறிய சாதனமே அடிப்படையாகும். இதை, அந்த சாதனங்களின் ஆக்சிஜன் என்றும் கூறலாம்.

இந்த சிப் தயாரிப்பில், குட்டி ஆசிய நாடான தைவான் முன்னிலையில் உள்ளது. தென் கொரியா, சீனா, அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகளே அதிகளவில் இதை தயாரிக்கின்றன. ஜப்பான், ஜெர்மனி, இஸ்ரேல் ஆகியவையும் சிப் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. கொரோனா பரவல் காலத்தின்போது சிப்கள் கிடைக்காததால், பல நாடுகளில் தொழில்கள் முடங்கும் நிலை உருவானது. 2019ல் இந்தத் துறைக்கு மத்திய அரசு அதிக ஊக்கம் அளித்தது.

இதன் ஒரு பகுதியாக, குஜராத் மற்றும் அசாமில், டாடா குழுமத்தின் ‘டாடா எலக்ட்ரானிக்ஸ்’ நிறுவனம் சார்பில், மூன்று ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. மொத்தம், 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் இவை கட்டப்பட உள்ளன.

இவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது. அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளி என பல துறைகளிலும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. மொபைல் போன் தயாரிப்பில், உலகின் இரண்டாவது பெரிய நாடாக நாம் உள்ளோம். செமி கண்டக்டர் தயாரிப்பு தொடர்பாக, 1960களிலேயே நம் நாட்டில் பேசப்பட்டது. ஆனால், தொடர்ந்து ஆட்சியில் இருந்தவர்கள், ‘இதில் என்ன இருக்கிறது… எதிர்காலத்துக்கான தேவைதானே… பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று மெத்தனமாக இருந்துவிட்டனர்.

நம் நாட்டின் திறன்களை புரிந்து கொள்ளாமல், முன்னுரிமைகளை தெரிந்து கொள்ளாத, எதிர்கால வளர்ச்சியை உணர்ந்து கொள்ளாமல், முயற்சிகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் இல்லாமல் இருந்து விட்டனர். ஆனால், நாங்கள் இவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளோம். அறிவியல், தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்த ஆர்வம் காட்டியதுடன், ஊக்கமும் அளித்தோம். அதனால் தான், நம்மால் கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரிக்க முடிந்தது.

செமி கண்டக்டர் துறையில் வளர்ச்சியை வேகப்படுத்துவதை ஒரு இயக்கமாக, இரண்டாண்டுக்கு முன் முன்னெடுத்தோம். அடுத்த சில மாதங்களில்

ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. தற்போது மூன்று ஆலைகளுக்கான அடிக்கல் நாட்டியுள்ளோம். இந்தியா ஒன்றை உறுதி அளித்தால், அதை நிறைவேற்றும். இந்த துறையில் நாம் பின்தங்கியுள்ளோம். ஆனால், இனியும் விட மாட்டோம். செமி கண்டக்டர் துறையில் உலகின் சக்தியாக இந்தியா மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை. விண்வெளி, அணுசக்தி, டிஜிட்டல் துறைகளில் உலகின் சக்தியாக உள்ளதுபோல், இந்த துறையிலும் நாம் நிச்சயம் சாதிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

டாடா குழுமத்தின் டாடா எலக்ட்ரானிஸ் நிறுவனத்தின் சார்பில், குஜராத்தின் தோலேராவில் உள்ள சிறப்பு முதலீட்டு மண்டலத்தில், செமிகண்டக்டர் தயாரிப்பு ஆலை, 91,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைய உள்ளது. இது, நாட்டின் முதல் வணிக செமி கண்டக்டர் ஆலையாகும்.
இதை தவிர, குஜராத்தின் சனத்தில், 27,000 கோடி ரூபாய் மற்றும் அசாமின் மோரிகானில், 7,500 கோடி ரூபாய் முதலீட்டில், செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் பரிசோதனை ஆலைகள் அமைய உள்ளன.