மேற்கு வங்கத்தில் ஓபிசி பட்டியலில் இருந்து பல பிரிவினர் நீக்கம்: கொல்கத்தா உயர் நீதிமன்றம்

சேவைகள் மற்றும் பதவிகளில் காலியிடங்கள் இட ஒதுக்கீடு சட்டம் 2012-ன் கீழ் மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் தவிர) சான்றிதழ் பெற்றவர்களின் ஓபிசி அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.

நீதிபதிகள் தபப்ரதா சக்ரவர்த்தி மற்றும் ராஜசேகர் மந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. தீர்ப்பில் கூறி யிருப்பதாவது:

கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதியிலிருந்து 2012-ம் ஆண்டு மே 11-ம் தேதி வரை யிலான காலகட்டத்தில் 42 பிரிவினர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக (ஓபிசி) சேர்க்கப்பட்டுள்ளனர். சேவைகள் மற்றும் பதவிகளில் காலியிடங்கள் இட ஒதுக்கீடு சட்டம், 2012-ன் கீழ் மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் தவிர) சான்றிதழ்இவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

அந்தப் பிரிவுகளில் பல பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன. ஆனால்,2010-ம் ஆண்டுக்கு முன்பாக 66 ஓபிசி வகுப்பினரை வகைப்படுத்தும் மாநில அரசின் நிர்வாக உத்தரவுகளில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. ஏனெனில் அவற்றுக்குஎதிராக வழக்கு தொடரப்படவில்லை.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையச் சட்டம், 1993-ன் கீழ், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கருத்தும் ஆலோசனையும் மாநில சட்டமன்றத்தைக் கட்டுப்படுத்தும். மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, தேசியஆணையத்துடன் கலந்தாலோசித்து, புதிய வகுப்புகளைச் சேர்ப்பது அல்லது மீதமுள்ள வகுப்பினரை ஓபிசிகளின் மாநிலப் பட்டியலில் சேர்ப்பது குறித்த பரிந்துரைகளுடன் சட்டமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.