மூன்றாம் பாலினத்தவர் தங்குமிடங்கள்

மூன்றாம் பாலினத்தவரின் நிலையை மேம்படுத்தும் வகையில், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கடந்த 2020 ஜனவரியில் நடைமுறைப்படுத்தியது. மேலும், தேசிய மூன்றாம் பாலினத்தவர்களுக்கான கௌன்சிலை ஆகஸ்ட் 202ல் நிறுவியது. அவர்களுக்கான தேசிய இணையதளத்தை நவம்பர் 2020ல் அறிமுகப்படுத்தியது. இதில் பதிவு செய்த எந்தவொரு மூன்றாம் பாலின விண்ணப்பதாரரும், அலுவலகத்துடன் எந்தவித நேரடி தொடர்பும் இல்லாமல் அடையாளச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையைப் பெறலாம். மேலும், திருநங்கைகளுக்கான மறுவாழ்வு, மருத்துவ வசதிகள், ஆலோசனை, கல்வி, திறன் மேம்பாடு, பொருளாதார மேம்பாடு போன்றவற்றிற்காக ‘ஸ்மைல்’ எனும் திட்டமும் துவக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘கரிமா கிரஹ்’ எனும் பெயரில் மூன்றாம் பாலினத்தவரின் பாதுகாப்பிற்காக 12 தங்குமிடங்களை தொடங்கும் பணியை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் துவக்கியுள்ளது. இந்த தங்குமிடங்களை அமைப்பதற்காக, சமூக அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்துள்ளது. முதல்கட்டமாக, தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பீகார், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மாதிரி தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.