நடப்பு லோக்சபா தேர்தலில், மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணியை வீழ்த்த, காங்., – தி.மு.க., – ராஷ்ட்ரீய ஜனதா தளம் – ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து, ‘இண்டியா’ என்ற பெயரில் கூட்டணியை அமைத்துள்ளன.
இந்நிலையில் பீஹார் தலைநகர் பாட்னாவில், மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் கூறியதாவது: மத்தியில் ஆளும் பா.ஜ., இட ஒதுக்கீடு முறைக்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டத்தை ரத்து செய்து இட ஒதுக்கீட்டை அகற்ற அக்கட்சி விரும்புகிறது.
முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு சலுகைகள் கிடைக்க ஆதரவு தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். லாலு பிரசாத் யாதவின் பேச்சுக்கு பா.ஜ., தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, நேற்று மாலை அவர் விளக்கம் அளித்தார். அப்போது அவர், ‘முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க ஆதரவு தருவேன் என்று கூறினேன். ஆனால், இந்த ஒதுக்கீடு மதத்தின் அடிப்படையில் அல்லாமல், பொருளாதாரத்தின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று தான் கூறினேன்,” என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில், நேற்று நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
கால்நடைகளுக்கான தீவனத்தை சாப்பிட்டவர், லாலு பிரசாத். தீவன வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு ஜாமினில் வந்துள்ள அவருடன், காங்., வெட்கமின்றி கூட்டணி வைத்துள்ளது. அவர் தற்போது, இண்டியா கூட்டணியின் நோக்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு மட்டுமல்ல; முழு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, லாலு பிரசாத் கூறுகிறார். எஸ்.சி., – எஸ்.டி., – ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என்பது இதன் அர்த்தம். பா.ஜ., இருக்கும் வரை இண்டியா கூட்டணியின் எண்ணம் பலிக்காது. யாருடைய இட ஒதுக்கீட்டையும் தொட்டுப் பார்க்கக் கூட விட மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.