முனைவர் ராமசுப்ரமணியம் பேட்டியின் இரண்டாம் பகுதி

மிளிரும் புத்தொளி தொடரில், முனைவர் ராமசுப்ரமணியம் பேட்டியின் இரண்டாம் (நிறைவுப்) பகுதி. முழுவதும் படியுங்கள். இறுதியில் ஒரு சுவாரசியம் உங்களுக்கு காத்திருக்கிறது.

மஸ்கட் மாநாட்டில் உரையாற்றுகிறார்

சைபர் பாதுகாப்பு- இந்தியாவில் வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள்- உங்கள் கணிப்பில் …

சைபர் பாதுகாப்பில் நிபுணத்துவத்தின் – திறன்களின்  தேவை நீங்காது, குறைந்துவிடாது. திரும்பிப் பார்க்கையில், இருபது ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வியக்க வைக்கின்றன. கிளவுட் டெக்னாலஜி,  அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களை ( ஸ்மார்ட் கைபேசி /  கடிகாரம் / குளிர்சாதனப் பேட்டி போன்றவை ) இணைய தளத்துடன் இணைத்து பயனைப் பெருக்கி கொள்ளுதல் –  ஐ ஓ டி (IOT ), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) இவற்றின் வருகையால் வசதிகள் பெருகியுள்ளன. அதே வேளையில் ஆபத்துக்களும் அதிகரித்துள்ளன. இணைய பாதுகாப்பு திறன்களுக்கான வாய்ப்புகள் தொடர்ந்து உயரும் என்று நம்பிக்கையுடன் கூறலாம். தன்னுடைய திறன்களை மேம்படுத்தி , புதுப்பித்துக் கொள்ள ஆர்வமுடையவராக இருக்க வேண்டும்.

ஒரு  பேரிடர் மேலாண்மை நிபுணராக ( Business  Continuity  Management), கொரானா விஷயத்தில் நம் அரசின் செயல்பாட்டைப் பற்றி…

பரந்து விரிந்த பன்முகத் தன்மை கொண்ட பாரத நாட்டுடன் உலகின் எந்த நாட்டை நீங்கள் ஒப்பிட முடியும்? கொரானா என்ற நோய்த் தொற்றும் யாருக்கும் இன்னமும் பிடிபடவில்லை. இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கையில்,    நம் இந்திய அரசின் நடவடிக்கைகள் துல்லியமானவை, தீர்க்கமானவை , காலத்தில் எடுக்கப்பட்டவை. அவற்றில் காணப்படும் தொலைநோக்கும் முதிர்ச்சியும் ஒரு குடிமகனாக என்னைப் பெருமிதம் கொள்ள வைக்கின்றன.

டிஜிட்டல் மயமாக்கல் சூழலில் வங்கி வாடிக்கையாளர் கணக்குகளில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன –  உங்கள் பரிந்துரைகள் மற்றும் தீர்வுகள் …

மோசடிகள் முன்பும் இருந்தன என்பதை நாம் மறக்கக் கூடாது. இப்பொழுது, வடிவம் மாறியிருக்கிறது. பயனர்கள் நாம் நம் பங்கிற்கு தத்தம் சேமிப்பைக் காத்துக்கொள்வதில் கவனமாக இருத்தல் அவசியம்.  நம் வங்கி அறிவுறுத்தும் முன்னெச்சரிக்கை நடைமுறைகளை மிக கவனமாக, எந்த தொய்வும் இல்லாமல் கடை பிடிக்க வேண்டும்.  வலுவான கடவுச் சொற்களைப் (Password) பயன்படுத்துவது , அவற்றை தவறாமல் மாற்றுவது போன்ற எளிய முன்னெச்சரிக்கைகள்.; அவற்றை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது – (நீங்கள் மிகவும் நம்புபவர்களையும்  சேர்த்துத் தான் சொல்கிறேன்). உங்கள் சங்கேத எண் ( PIN) ஏடிஎம் கார்டில் எழுதப்படவில்லை அல்லது மொபைல் ஃபோனில் மற்றவர்களுக்கு புரியும்படி  சேமிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவது போன்றவை சாமானிய  பயனரை பாதிக்கும் வங்கி மோசடிகளின் வாய்ப்புகளை பெருமளவில்   மட்டுப் படுத்தலாம்.

வங்கிகளும் தொடர்ந்து பயனர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் புதிய புதிய உத்திகளைக் கடைபிடிக்க வேண்டும்.

குற்றவியல் சிண்டிகேட்களால் வங்கி அமைப்புகளின் (system level) மேல் தொடக்கப் படும் தாக்குதல்களின் கதை வேறு வகைப்பட்டது. அங்குதான் அவற்றிற்கு அரசு நிர்வாகம், காவல் துறை, ரிசர்வ் வங்கி, தனியார் சைபர் ஆலோசகர்கள் என்று ஒரு சூழல் அமைப்பு- கட்டமைப்பு நிறுவனமயமாக்கப்பட்ட (Institutionalised) சைபர் கிரைம் மேலாண்மை செயல்முறைகளின் தேவை ஏற்படுகிறது. நம் நாட்டில் வங்கித் துறைகளின் செயல்பாடு வேறு எந்த நாட்டிற்கும் பின் தங்கிவிடவில்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

திருவனந்தபுரம் சைபர் தடயவியல் பயிற்சிப் பட்டறை

இன்னொரு புறம், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருகின்றனவே ?

உண்மைதான். சமூக ஊடகங்கள் வருகைக்குப் பின்னர், பெண்களின் பர்சனல் தகவல்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு, அவர்களுக்கு வலை வீசுவது, நட்பை நிராகரித்தால் மிரட்டுவது, ஆபாசமாகச் சித்தரிப்பது என்பவை தொடர் கதையாகி வருகிறது. இத்தனைக்கும் நன்கு படித்தவர்கள் தான் முக நூல் / ட்விட்டர் / டிக் டாக் இவற்றில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனம் செலுத்த மறந்து விடுகிறார்களே? வங்கிக் கணக்கு விஷயத்தில் எவ்வளவு கவனம் தேவைப் படுமோ அதை விட சமூக ஊடக நட்பு விவகாரத்தில் அதிகம் வேண்டும். உங்கள் சமூக ஊடக கணக்குகளில் தனியுரிமை அமைப்புகளை (Privacy settings) கட்டுப்படுத்துவது போன்ற அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது முற்றிலும் குற்றங்களை அகற்றா விட்டாலும், எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கும்.

ஆன்லைன் கல்வியும் வளர்ந்து வருகிறது- வாய்ப்புகள்,   மாணவர்கள் நலனைப் பேண அரசாங்க விதிமுறைகளின்  தேவை போன்றவை பற்றி…

ஊரடங்கின் பின் நம்மில் பலரும் ஆன் லைன் வழியாகத் தான் தகவல் பரிமாற்றங்களைச் செய்து வருகிறோம். உங்கள் விஜய பாரதம் ஆசிரியர் குழுவினர் கூட அப்படித் தான் கலந்தாய்வில் ஈடுபட்டீர்கள் இல்லையா?

கார்ப்பரேட் நிறுவனங்கள், உயர் கல்வி நிலையங்கள் இவற்றில் பத்தாண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டார்கள். ஊரடங்கினால், இது வரை ஆன் லைன் கல்வியிலிருந்து ஒதுங்கியிருந்தவர்கள் கூட  உள் நுழைந்துள்ளார்கள். இனி கொரானாவிற்குப் பின் செலவுகளைக் கட்டுப் படுத்த பலரும் தொடர்ந்து ஆன்லைன் வாய்ப்பை அரவணைப் பார்கள்.  ஆன்லைன் கல்வி நாளைய ஒழுங்காக மாறும்.

சால்போர்ட் (Salford, UK ) பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்

கல்வி முறையில் அறிவு வளர்ப்பு வழிகளில் அரசாங்கத்தின் வலுவான தலையீட்டிற்கு நான் தனிப்பட்ட முறையில் எதிரானவன். கற்பிக்கப்படுவது தேச விரோதமானது அல்ல அல்லது கற்பிக்கப்படும் தகவல்கள் பிழையானவை (உண்மையில்லாதவை) அல்லது காலாவதியானது என்பதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் பணி. சமத்துவம் மற்றும் சமூக நீதி பராமரிப்பு, அறிவுசார் சொத்துரிமைகள் பாதுகாப்பு போன்றவற்றில் பயிற்சி வகுப்பு நடத்துபவர்களின் அணுகுமுறைகளைத் தீர்மானிக்க வேண்டிய இடத்திலும் கண்காணிப்பு  நடத்தவும். முறையான  (formal) மற்றும் முறைசாரா (Informal) அறிவு மேலாண்மை  அமைப்புகளை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

கல்லூரி நாட்களில் வித்யார்த்தி  பரிஷத்தில் (ABVP) உங்களுடைய பணி, அனுபவங்கள், வழிகாட்டிய மூத்தவர்கள் பற்றி...

வித்யார்த்தி  பரிஷத் உடனான எனது தொடர்பை மகிழ்ச்சியோடும் பெருமையோடும் நினைவு கூர்கிறேன். விவேகானந்தா கல்லூரியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் பி ராமன்ஜி  இருந்தபோது, தமிழக மாநில செயலாளராக பணியாற்றும் நல் வாய்ப்பு  எனக்கு கிடைத்தது.  ABVP யின் குறிக்கோள் அறிவு – நற்குணங்கள் – ஒற்றுமை இவற்றை மாணவர்களிடம் மேலோங்கச் செய்தல் என்பது என்றைக்கும் பொருந்தக் கூடியவை அல்லவா? ABVP மேலும் பலவற்றைக் கற்றுக் கொடுத்தது, உதாரணமாக, தலைமைப் பண்பு. நான் பழகிய பேராசிரியர்கள் ஒவ்வொருவரும் எனது சிந்தனை செயல்முறை மற்றும் சிக்கல் தீர்க்கும் (Problem Solving) அணுகுமுறையில்  ஒருஅழியாத தடத்தைப் பதித்திருக்கிறார்கள். அப்போதைய ஏபிவிபியின் தேசியத் தலைவரான பேராசிரியர் தத்தாஜி டிடோல்கர் தமிழகத்திற்கு  பயணம் வந்த போது சந்தித்ததையும், நான் டெல்லிக்குச் சென்றபோது தேசிய செயலாளர் ஸ்ரீ ராஜ்குமார் பாட்டியாஜியுடன் அளவளாவியதையும் நினைக்கையில் மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னையில், ஸ்ரீ சீனிவாசன் ஜி(100-ஜி) யுடனான எனது தொடர்பிலிருந்து நான் பெற்ற அனுபவம் இன்னமும் சிறப்பானது.  டாக்டர் எஸ் கிரீசன் ஜி, டாக்டர் தினகர் மோட்லக் ஜி, அமைப்புச் செயலாளர் சி கோபாலன் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.  ABVP உடனான தொடர்பு நிச்சயமாக என் வாழ்வில் மறக்க முடியாதது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *