முதுநிலை மருத்துவ மாணவர்களை கல்லூரி விடுதிகளில் தங்குமாறு கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை: தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை

முதுநிலை மருத்துவ மாணவர்களை கல்லூரி விடுதிகளில் தங்குமாறு கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக என்எம்சி முதுநிலை மருத்துவக் கல்வி வாரிய துணைச் செயலர் அஜேந்தர் சிங், அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: முதுநிலை மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை விதிகளில் (பிஜிஎம்இஆர்), முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு உரியதங்கும் வசதிகளை ஏற்படுத்தித்தரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மாணவர் விடுதிகளில் அவர்கள் தங்கி படிப்பது கட்டாயமில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த கருத்தைத்தான் முதுநிலை மருத்துவக் கல்வி வாரியமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால், மருத்துவ மாணவர்களிடம் இருந்து இந்த விவகாரம் குறித்த புகார்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கிறது. கல்லூரி விடுதிகளில் தங்குமாறு கல்வி நிறுவனங்கள் தங்களை கட்டாயப்படுத்துவதாகவும், அதற்காக மிக அதிகமான தொகையை வசூலிப்பதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இது ஒழுங்குமுறை விதிகளுக்கு புறம்பான செயலாகும். இத்தகைய விதிமீறலில் ஈடுபடும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக, மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ இடங்களை குறைத்தல், அபராதம் விதித்தல், மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.