முக்கிய குற்றவாளி கைது

மார்ச் 12, 1993 அன்று மும்பையின் 12 வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதிகளால் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டது. இது உலகையே உலுக்கியது. இதில் 257 பேர் கொல்லப்பட்டனர், 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இந்த குண்டுவெடிப்பில் பிரதான குற்றவாளிகளில் ஒருவரும் பாரதத்தின் அதிகம் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவருமான அபுபக்கரை,  நமது பாதுகாப்பு அமைப்புகள் இறுதியாக கைது செய்துள்ளன. அபுபக்கரை நாடு கடத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. பிடிபட்ட பயங்கரவாதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆயுதம், வெடிமருந்து பயிற்சி, தொடர் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் கடத்தல் சதி மற்றும் திட்டமிடல்களில் ஈடுபட்டவர். அதுமட்டுமின்றி, தாவூத் இப்ராஹிமின் முக்கிய கூடாளிகளான முகமது, முஸ்தபா தோசாவுடன் இணைந்து வளைகுடா நாடுகளில் இருந்து மும்பைக்கு தங்கம், ஆடைகள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை கடத்துவதிலும் ஈடுபட்டுள்ளார்.  அபுபக்கருக்கு துபாயில் பல வணிக நிறுவனங்கள் உள்ளன.  இரண்டாவது மனைவியாக ஈரானிய பெண்ணை மணந்துள்ளார். அபுபக்கர் 2019ல் ஒருமுறை கைது செய்யப்பட்டார். இருப்பினும், சில ஆவணச் சிக்கல்கள் காரணமாக அவரை பாரதம் கொண்டுவர முடியாமல் போனது.