சூடானில் சிக்கித் தவிக்கும் பாரத சமூகத்தினரை பத்திரமாக மீட்க பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ‘ஆபரேஷன் காவேரி’ என்ற இந்த முயற்சியில், மத்திய வெளியுறவுத்துறை, மத்திய உள்துறை, ராணுவம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஐ.நா அமைப்பு மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சௌடி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இணைந்து இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாரதத்தை தவிர, அண்டை நாட்டினரையும் மீட்க மத்திய அரசு உதவி வருகிறது. இந்த சூழலில், மத்திய அரசின் இந்த மாபெரும் முயற்சிகளுக்கு, வழக்கம் போலவே, உள்ளூரில் உட்கார்ந்துகொண்டே ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை திராவிட மாடல் அரசு முன்னெடுத்துள்ளது. அவ்வகையில் மத்திய அரசு முதல்கட்டமாக மீட்டவர்களில் தமிழகத்தை சேர்ந்த 9 பேர் டெல்லியிலிருந்து சென்னை மற்றும் மதுரைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். அவர்களை தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்னை விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். அப்போது விமான நிலையங்களில் பேட்டியளித்த தமிழகத்தை சேர்ந்தவர்கள், ஏதோ தமிழக அரசே அவர்களை சூடானில் இருந்து கஸ்டப்பட்டு மீட்டுக்கொண்டு வந்ததுபோல், தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி என்று கூறினார்கள். மேலும், மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திராவிட மாடல் ஆட்சியாளர்களை போல குறிப்பிட்டனர். ஆனால், இதே நபர்கள் டெல்லியில் பேட்டியளித்தபோது, சூடானில் சிக்கித் தவித்த எங்களை மத்திய அரசுதான் பாதுகாப்பாக மீட்டு அழைத்து வந்தது. பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், பாரதத் தூதரக அதிகாரிகளுக்கும் நன்றி என்று வாழ்த்தியிருந்தனர். இவ்வாறு இரு இடங்களிலும் இரு வேறு மாதிரியாக இவர்கள் பேசும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. உக்ரைனில் இருந்து வந்தவர்களை போலவே, இவர்களும் தி.மு.கவுக்கு சாதகமாக பேசும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டதா அல்லது மிரட்டப்பட்டார்களா என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.