மிருகத்தனத்தை நியாயப்படுத்துவதாக தி.மு.க., அரசின் செயல் உள்ளது: முருகன்

‘பட்டியலின மக்களுக்கு எதிராக கொடுமைகள் தொடரும் நிலையில், அதை தடுக்க தமிழக அரசு தவறி வருகிறது’ என, மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி ஊராட்சி பகுதியில், பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி நீரை குடித்த, குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்த போது, சில தினங்களுக்கு முன் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டு இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வேங்கைவயல் குடிநீர் தொட்டியில், மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன. அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுபோன்ற கொடூரத்தை போலி திராவிட மாடல் தி.மு.க., அரசு கைகட்டி வேடிக்கை பார்த்து வருவதால் தான், மீண்டும் மீண்டும் அதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மிக கொடூரமான செயல்.

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அதை ஆய்வு செய்த அதிகாரிகளை வைத்து, தொட்டியில் பாசி பிடித்ததால் துர்நாற்றம் வீசியதாக, சம்பவத்தை வழக்கம் போல் திசை திருப்பும் வேலையில், தி.மு.க., அரசு இறங்கியுள்ளது. பட்டியலின மக்களுக்கு எதிராக, இத்தகைய கொடுமைகள் தொடரும் நிலையில், அதை தடுக்க தமிழக அரசு தவறி வருகிறது.

தி.மு.க., அரசின் இந்த செயல், மிருகத்தனத்தை நியாயப்படுத்துவது போல உள்ளது. இது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின், வாய்மூடி மவுனமாக இருக்கிறார்.

பதில் என்ன?

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக, தமிழகத்தில் நடக்கும் அத்துமீறல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. தி.மு.க., அரசு பதவி ஏற்று, மூன்று ஆண்டுகளை எட்ட உள்ள நிலையில், பட்டியலின, பழங்குடியின மக்கள் அனுபவித்து வரும் கொடூரங்கள் கொஞ்சமல்ல.

பட்டியலின மக்களை, தங்கள் சுயலாப அரசியலுக்கு பயன்படுத்தும் முதல்வர் ஸ்டாலின், இதற்கு சொல்ல போகும் பதில் என்ன? இந்த செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்க தகுதியற்றவர்கள். இந்நிகழ்வின் பின்னணியில் இருப்பவர் யாராக இருந்தாலும், அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்று தர, தி.மு.க., அரசும், காவல் துறையும் முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.