மாவட்டம் முழுவதும் பனை மரங்களை அழித்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பனை தமிழர்களின் அடையாளம். 90 அடி உயரம் வரை வளரும் பனை மரங்கள் 125 ஆண்டுகள் வாழக்கூடியவை. தமிழக அரசின் மரமாக பனைமரம் உள்ளது.
காடு, மலை, ஆற்றங்கரைகள், கடற்கரை என, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வானுயர வளர்ந்து நிற்கும் பனை மரங்கள் தமிழர்களின் வாழ்வில் ஒன்றி ணைந்தவை. பனை மரத்தில் இருந்து பதநீர், நுங்கு, பனம் பழம், பனங்கிழங்கு என நேரடி பயன்களாகவும், பனை வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனஞ்சர்க்கரை என மற்ற பொருட்களும் கிடைக்கிறது. பனை ஓலைகளை மேற் கூரையாகவும், பனை வாரைகளை குறுக்கு கழியாகவும், துாணாகவும், கயிறு கொண்டு கூரை வீட்டை முன்னோர்கள் கட்டினர்.
பனையில் இருந்து மேசை, நாற்காலி, ஓலை கூடைகள், மாலை, குல்லாய், விசிறிகள், விளையாட்டு பொருட்கள், பாய், விசிட்டிங் கார்டுகள், வாழ்த்து அட்டைகள் என பல பொருட்களை தயாரிக்கின்றனர். பனையில் இருந்து கிடைக்கும் பதநீர் உடல் சூட்டை தணிக்கும். இந்த பானத்தை தென்மாவட்டங்களில் இன்றும் விற்பனை செய்கின்றனர். பனையின் அனைத்து பாகங்களும் பயன் தருபவை என்பதால் இதை கல்பதரு என அழைக்கின்றனர்.
பனை பொருட்களுக்கு இப்போது உலக அளவில் தேவை அதிகரித்துள்ளது. ரசாயனம் இல்லாத இயற்கை உணவை விரும்பும் மேலைநாட்டினர் பலர் பனை பொருட்களை விரும்புகின்றனர். பனை நுங்கில் இருந்து தயாரிக்கப்படும் ஜாம், பனம்பழச்சாறு ஆகியவை மேலை நாடுகளில் நவீன தொழில் நுட்பத்தில் பேக் செய்து விற்பனை செய்கின்றனர். பனசர்க்கரைக்கு உலகச்சந்தையில் கிலோ 500 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. பனை கொட்டையின் ஓடுகளில் இருந்து மருத்துவ குணமுள்ள எண்ணெய் தயாரிக்கின்றனர்.
பனங்கிழங்கில் இருந்து மாவு தயாரித்து இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். தமிழகத்திலும் பனைத் தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் பனை நுங்கில் இருந்து ஜாம் செய்து வெற்றி பெற்றுள்ளனர். இது மட்டுமின்றி பனை மரங்கள் நிலத்தடி நீரை சேமிப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பவை. பனை மரங்கள்களை பாதுகாக்க தவறியதால் சீரற்ற பருவ நிலை ஏற்பட்டிருப்பதுடன், மழையையும் இழந்து வருகின்றோம். விழுப்புரம் மாவட்டத்தில் பல லட்சம் பனை மரங்கள் உள்ளன.
பனையில் இருந்து உப பொருட்கள் தயாரிக்கும் தொழில் நுட்ப அறிவும், பொருளாதார வசதியும், போதிய பயிற்சியும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு இல்லை. இதனால் கடந்த சில ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்டத்தில் பனை மரங்களை கட்டட வேலைக்கு பயன்படுத்தும் செண்ட்ரிங் பலகைகளுக்காகவும், செங்கள் சூளைகளுக்கும் வெட்டி விற்பனை செய்து வருகின்றனர்.
ஒரு பக்கம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பனை மரத்தின் அவசியம் கருதி ஏரி, குளம், பொது இடங்களில் பனை விதைகளை நட்டு வருகின்றனர். ஆனால் சொந்த நிலத்தில் உள்ள பனை மரங்களில் இருந்து எந்த வருவாயும் இல்லை என்பதால் விவசாயிகள் அவைகளை பாதுகாக்காமல் வெட்டி விற்பனை செய்கின்றனர்.
இதனால் நீண்ட ஆயுளை கொண்ட பனை மரங்களின் வாழ்வு அற்ப ஆயுளில் முடிந்து வருகிறது. தென்னிந்தியாவில் பனையில் இருந்து சர்க்கரை தயாரிக்கும் தொழில் நுட்ப ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சென்னை மாதவரத்தில் உள்ளது. பனை மரங்கள் பணம் கொழிக்கும் மரங்கள் என்பதை உணர்த்தவும், அரசு பனை பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை விழுப்புரம் மாவட்டத்தில் துவங்கவும், பனையில் இருந்து கைவினை பொருட்கள், கருப்பட்டி தயாரிக்கவும் மகளிர் குழுக்களுக்கு பயிற்சியும், இத்தொழிலை துவங்க வங்கி கடன் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பனை மரங்கள் அழிவதை தடுக்க வேண்டும்.