ஒரு கிலோ தக்காளி ரூ. 100 வரை விற்கப்படுகிறது.
தக்காளிக்கு பல மாற்றுகள் உள்ளன. இன்னும் சொல்லப்போனால் செடித்தக்காளியை விட மரத்தக்காளியும் மணத்தக்காளியும் மகத்தானவை.
மரத்தக்காளி, ‘டமரில்லோ’ என்று குறிப்பிடப்படுகிறது. ஈக்குவடார், கொலம்பியா, பெரு, சிலி, பொலிவியா ஆகிய நாடுகளில் டமரில்லோ அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தென்னாப்பிரிக்கா, ருவாண்டா போன்றவற்றிலும் இந்தியாவில் மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, அஸ்ஸாம், நாகாலாந்து, மிசோராம், இமாசலப்பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களிலும். தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், கொல்லிமலை, சிறுமலை, தாண்டிக்குடி உள்ளிட்ட இடங்களில் மரத்தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இது கடல் மட்டத்திலிருந்து 1,000 அடி முதல் 7,500 அடி வரையிலான உயரத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. மரத்தக்காளியில் வைட்டமின்கள் ஏ, சி தவிர கால்சியம், மேக்னிசியம், இரும்பு போன்றவையும் உள்ளன. மரத்தக்காளியின் சுவை ஏறத்தாழ செடித்தக்காளியை ஒத்துள்ளது. மரத்தக்காளி தொடர்ந்து 6 ஆண்டுகள் வரை மகசூல் தருகிறது. மரத்தக்காளி கொத்து கொத்தாக தொங்குவது கண்களுக்கு விருந்தாக உள்ளது. ஒரு மரத்தில் சுமார் 20 கிலோ வரை மரத்தக்காளியை பறிக்க முடியும்.
செடித்தக்காளியைவிட மரத்தக்காளி ஒரு வகையில் மிகவும் உயர்ந்தது. செடித்தக்காளி ஓரிரு நாளில் அழுகிவிடும். ஆனால் மரத்தக்காளி ஒன்றிரண்டு வாரம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். ஒரு கிலோ மரத்தக்காளி ரூ. 20க்கு விற்பனை ஆகிறது. எனவே செடித்தக்காளிக்கு மாற்றாக மரத்தக்காளியை தாராளமாக பயன்படுத்தலாம்.
மரத்தக்காளியின் தோல் சற்று கசப்பானது. எனவே தோலை நீக்கிவிட்டு மரத்தக்காளியை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். செடித்தக்காளி பழத்தை பயன்படுத்தி சாஸ், ஜாம் போன்றவை செய்யப்படுவதைப் போல மரத்தக்காளி கனியையும் பயன்படுத்தி இத்தகையவற்றை செய்யலாம்.
மணத்தக்காளி தமிழ்நாட்டில் பரவலாக காணப்படுகிறது. இது சொடக்குத் தக்காளி என்றும் கூறப்படுகிறது.
சொடக்குத் தக்காளியில் இரண்டு வகை உண்டு. ஒன்று சாதாரணமாக பச்சை நிறத்தில் இருக்கும். இதுவே பெருவாரியாக காணப்படுகிறது. இன்னொன்று நெய் தக்காளி என்று குறிப்பிடப்படுகிறது. இதன் பழம் லேசான வரியுடனும் பளபளப்பாகவும் காணப்படும். இது சற்று அதிக ருசியோடு இருக்கும். இதன் கீரையும் வத்தலும் உடல் நலனுக்கு நன்மை அளிக்கும்.
செடி தக்காளி பழம் அரிதாகும் காலத்தில் மரத்தக்காளி, மணத்தக்காளி போன்றவற்றையும் பயன்படுத்தினால் செடித்தக்காளியின் விலை குறைந்துவிடும்.