‘அரசு பள்ளி மாணவர்கள் என்றால், தி.மு.க.,வுக்கு இளக்காரமாகி விட்டது; அழுகிய முட்டை வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடியில் உள்ள பல பள்ளிகளில், கடந்த புதன்கிழமை முதல் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்துள்ளன.
அதைத்தொடர்ந்து, மூன்று நாட்களாக மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை வழங்காமல் நிறுத்தி உள்ளனர். அழுகிய நிலையில், 2,000 முட்டைகள் இருந்ததாக செய்திகளும் வெளிவந்துள்ளன. அமைச்சர் கீதா ஜீவன், மாணவர்கள் குறித்த எந்த கவலையும் இல்லாமல், மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்குவதை தொடர்கிறார்.
குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க, பிரதமர் மோடி கொண்டு வந்த, ‘போஷான் அபியான்’ திட்டத்தின் கீழ், ஏழு ஆண்டுகளில் தமிழகத்திற்கு, 2,907 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. திட்டத்தால் சராசரியாக, 50 லட்சம்
குழந்தைகள் பயன் பெறுகின்றன. ஆனால், தமிழக பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அடிக்கடி எழுந்தாலும், தி.மு.க., அரசு எந்த அக்கறையும் இல்லாமல் உள்ளது. ஏழை அரசு பள்ளி மாணவர்கள் என்றால், தி.மு.க.,வுக்கு இளக்காரமாகி விட்டது. உடனே, மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கி, அவர்கள் உயிருடன் விளையாடி கொண்டிருக்கும் சம்பந்தப்பட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.