மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு: அமைச்சர்

”மழையை எதிர்கொள்ள, தமிழக அரசு 100 சதவீதம் தயாராக உள்ளது,” என, வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார். சென்னையில், மாநில கட்டுப்பாட்டு அறையில், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த மாதம் வரை, 40 சதவீதம் மழை குறைவாக இருந்தது. நேற்றைய அளவில், 17 சதவீதம் குறைவாக உள்ளது. மாநிலம் முழுதும் மாவட்ட கலெக்டர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலுார், திருவாரூர் மாவட்டங்களில், அதிக மழை பெய்துள்ளது. அங்கு வேண்டிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.

மழைக்கு முன்பே அனைத்து மாவட்டங்களிலும் நிவாரண முகாம்கள் ஏற்படுத்த, முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 4964 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. இதுவரை முகாமில் யாரும் தங்க வைக்கப்படவில்லை.

கண்காணிப்பு அலுவலர்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மனித உயிர் சேதம், கால்நடை உயிர் சேதம் தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை அதிகம் இருக்கும் எனக்கருதப்படும், 27 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பு, கரையோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்படுகிறது. வைகை அணை திறப்பு குறித்து, 80,000 பேருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது. மழையால் சாலை துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு போன்ற பிரச்னை இல்லை. ஒவ்வொரு துறையும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

பூண்டி ஏரியில் 60; செங்குன்றம் ஏரியில் 82; செம்பரம்பாக்கம் ஏரியில் 85 சதவீதம் தண்ணீர் உள்ளது. தொடர்ந்து நீர் நிலைகள் கண்காணிக்கப்படுகின்றன. சாத்தனுார், பேச்சிப்பாறை, கிருஷ்ணகிரி அணைகள் 90 சதவீதம் வரை நிரம்பி உள்ளன. கையை மீறி போகும் அளவுக்கு எதுவும் இல்லை. உள்ளாட்சி நிர்வாகம், வருவாய் துறை அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். சென்னையில் 169 நிவாரண முகாம்கள், 210 பம்புகள் தயார் நிலையில் உள்ளன. சுரங்கப்பாதைகள் கண்காணிக்கப்படுகின்றன.

தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் 150 பேர், மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் 400 பேர் தயாராக உள்ளனர். அரசு மழையை எதிர்கொள்ள, 100 சதவீதம் தயாராக உள்ளது.

மாநில, மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையங்கள், 24 மணி நேரமும் செயல்படும். இவற்றை 1070, 1077 என்ற எண்கள் வழியே தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ் ஆப் எண் 9445869848.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, 27 மாவட்ட கலெக்டர்களுக்கு, வருவாய் துறை நிர்வாக ஆணையர் பிரபாகர் கடிதம் எழுதி உள்ளார்.