மறந்தவனுக்கு மஹாளயம்

மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் கடமைகள் பல உண்டு. ஒன்று – தேவ கடன், இரண்டு – ரிஷி கடன்,  மூன்று – பித்ரு கடன். அதில் முக்கியமானது பித்ரு கடன். இது குறித்து ஒருவன் தன் தகப்பனார் இருக்கும் வரையில் கவலைப்படத் தேவையில்லை. தந்தை காலமானதும் அது நாள்வரை அவர் கடைப்பிடித்துவந்த பித்ரு கடன் மகனுக்கு உரியதாகி விடும். தன் குலத்தில் மறைந்த மூதாதையர்களுக்கு ஆண்டுதோறும் செய்யப்படும் சிரார்த்தங்கள் ‘பித்ருக் கடன்’ என்றும் சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு அமாவாசையன்றும் முன்னோர்கள் வழிபாட்டை செய்தாலும், வருடத்திற்கு 15 நாட்கள் முழுமையாக இதற்கென்றே ஒதுக்கி இருக்கிறார்கள். அதற்கு `மஹாளயபட்சம்’ என்று பெயர். சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாள் அமாவாசை எனப்படும். சூரியனை பிதுர்காரகன் என்றும் சந்திரனை மாதுர்காரகன் என்றும் சொல்வார்கள். ஜாதக ரீதியாக இந்த இரண்டும் முக்கியமானவை. அமாவாசைகளில் மூன்று அமாவாசைகள் மிக முக்கியமானவை. 1. ஆடி அமாவாசை, 2 தை அமாவாசை, 3. மஹாளய அமாவாசை. ஆடி அமாவாசை, தை அமாவாசை இரண்டும் முறையே தட்சிணாயண தொடக்கத்திலும், உத்தராயண தொடக்கத்திலும் வரும் அமாவாசைகள்.

இந்த அமாவாசைகள் இரண்டுக்கும் நடுவே உள்ள மஹாளய அமாவாசை. முக்கியமானது. ஏதோ ஒரு காரணத்தினால் அமாவாசையை மறந்தாலும் மகாளயத்தை மறக்கவே கூடாது. அதனால்தான் மறந்தவனுக்கு மஹாளயம் என்று ஒரு பழமொழியே உண்டு. ‘மஹாளயம்’ என்றால் `பெரிய கூட்டம் என்று பொருள்’. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக நம் வீடு தேடி வரும்  காலமே மஹாளய பட்சம்.  “பட்சம்” என்றால் பதினைந்து நாள்கள். மறைந்த நம் முன்னோர் பித்ருலோகத்திலிருந்து இந்தப் பதினைந்து நாள்கள் நம்மோடு தங்குகிறார்கள் .

பித்ருக்கள் உலகம் என்பது உடலை விட்ட ஆன்மாக்கள்  தங்களுக்கு வேறு உடல் கிடைக்கும் வரை காத்திருக்கும் இடமாகும். பித்ரு லோகம் எங்கே இருக்கிறது என்பது ஒரு கேள்வி? பூமிக்கும், அந்தரிட்சத்திற்கும் நடுவில் இருப்பதாக பாகவத புராணம் கூறுகிறது. நமது சங்க இலக்கியத்தில் நீத்தார் கடன் என்பது பழந்தமிழர் வழக்கத்தில் இருந்து வந்த பழமையான வழிமுறை. முன்னோரை வழிபட்டு அவர்களுடைய வாழ்த்துக்களைப் பெறுவதன் மூலம் தங்கள் குலத்துக்கு அனைத்து நலன்களும் விளையும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. “தென்புல வாழ்நர்க் கருங்கடனிறுக்கும்” (புறநானூறு 9 – தென்றி சைக்கண் வாழ்வோராகிய நுங் குடியில் இறந்தோர்க்குச் செய்தற்கரிய இறுதிச் சடங்குகளைச் செய்யும்) என்ற சங்கச் செய்யுள் அடி ஒன்றில் “தென்புல வாழ்நர்” என்ற தொடர் –  இறந்தார் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது.

இறந்த முன்னோர், வழிபடும் தெய்வம், விருந்து, சுற்றம், தன் குடும்பம் எனப்பட்ட ஐந்திடத்தும் அறநெறி வழுவாது காத்தல் இல்லறத்தானுக்குத் தலைமையான அறம். அதனால்தான் திருவள்ளுவர் முதல் வழிபாடாக தென்புலத்தார் வழிபாட்டை வைத்தார். தெய்வ வழிபாட்டுக்கு சற்று குறைவு வந்தாலும், முன்னோர்கள் வழிபாட்டில் எந்த குறையும் இருக்கக் கூடாது. அது மிகுந்த சிரத்தையுடனும், கவனத்தோடும் செய்யப்பட வேண்டும் என்பதால்தான் அந்த வழிபாட்டுக்கு சிரார்த்தம் என்று பெயர்.

பொதுவாக நல்ல நாட்களை இரண்டாகப்  பிரித்து  வைத்திருக்கிறார்கள். ஒன்று சுபதினம். இன்னொன்று புண்ணிய தினம். அமாவாசை போன்ற நீத்தார் கடன் நிறைவேற்றும் நாள்களை புண்ணிய தினம் என்று சொல்லுவார்கள். எனவே அமாவாசை, மகாளய காலங்கள் புண்ணிய காலங்களே. ஹிந்துக்கள், அன்று காலை விரதமிருந்து, அமாவாசை படையல் போட்டு, முன்னோரை வணங்கி, அதற்குப் பிறகு உணவு உண்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். எக்காரணத்தை முன்னிட்டும் இதிலிருந்து அவர்கள் விலகுவதில்லை. இது நம் ரத்தத்தில் ஊறிய நீத்தார் கடன் சிறப்பை உணர்த்துகிறது. எனவே, ‘‘நீத்தார்கடன்” ஆற்ற வேண்டிய பெருமையைப்  புரிந்துகொண்டு, நம் முன்னோர்களுக்கு, வருகின்ற மகாளய அமாவாசை அன்று  ஒவ்வொருவரும் நீர்க்கடன் செய்ய வேண்டும்.

ஆர். கிருஷ்ணமூர்த்தி