வேலுநாச்சியாரின் மறைவுக்கு பின்னர் அதே வழியில் தீரத்தோடு அந்நிய ஆட்சியை அகற்ற போராடியவர்கள் மாமன்னர்கள் மருது சகோதரர்கள். சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதரர்கள், ஆங்கிலேயருக்கு எதிராக கடுமையாக போரடிக் கொன்டிருந்தனர். 1801 ஜூன் மாதம் 12ம் தேதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ஜம்புத் தீவு பிரகடனம்”.
அவ்வறிக்கையின் மூலம் எல்லா இனங்களையும் சேர்ந்த மக்கள், நாட்டுப் பற்றுள்ள பணிகளை மேற்கொள்ள வேண்டும், ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கப்பட்டது. சிவகங்கை சீமையை ஆண்டுகொண்டிருந்த மருது சகோதரர்களை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்று தீவிரமாக முயன்றனர் ஆங்கிலேயர்கள். அவர்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு வெகுமதியும் சலுகைகளும் அறிவிக்கப்பட்டது.
அவர்கள் பிடிபடாததல், ஆங்கிலேய அரசு, மருது சகோதரர்கள் உடனடியாக சரணடையாவிட்டால் அவர்கள் உயிராக நினைத்து வழிபடும் காளையர் கோயிலில் உள்ள காளீஸ்வரர் ஆலயம் பீரங்கியால் தரைமட்டமாக்கப்படும் என்று அறிவித்தனர். கோயிலை காப்பாற்ற மருது சகோதரர்கள் சரணடைந்தனர். விசராணை இன்றி தூக்கில் இடப்பட்டனர் இருவரும். அவர்களோடு தளபதிகள் ஐநூறு பேரும் தூக்கிலிடப்பட்டனர். மருது சகோதரர்களின் வேண்டுகோளின்படி அவர்களில் தலை கோயிலின் முன்பாக புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இச்செய்தி சிவகங்கை சீமையின் வரலாற்றை சொல்லும் நாட்டுபுற கும்மி பாடல்களின் மூலம் தெரிய வருகிறது.