மைசூரு ”தன் மகனுக்காக என் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முதல்வர் சித்தராமையா சுமத்துகிறார்,” என மைசூரு பா.ஜ., – எம்.பி., பிரதாப் சிம்ஹா தெரிவித்தார்.
கர்நாடகாவில் இங்குள்ள ஹாசன் மாவட்டம் பேலுாரின் நந்த கொண்டனஹள்ளி கிராமத்தில், அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள 126 மரங்களை வெட்டியதாக, மைசூரு பா.ஜ., – எம்.பி., பிரதாப் சிம்ஹாவின் சகோதரர் விக்ரம் சிம்ஹா மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இது பற்றி அறிந்த தாசில்தார் மமதா மற்றும் வனத்துறையினர் ஆய்வு செய்து, உறுதிபடுத்தினார். இதை தொடர்ந்து, பெங்களூரில் தலைமறைவாக இருந்த விக்ரம் சிம்ஹாவை, வனத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். இது குறித்து, மைசூரில் நேற்று பிரதாப் சிம்ஹா அளித்த பேட்டி:
சித்தராமையா ஒரு புத்திசாலியான அப்பா; சிறந்த அரசியல்வாதி. தன் மகனை எம்.பி., ஆக்குவதற்காக, என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். மரம் வெட்டிய வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையில், என் தம்பி விக்ரம் சிம்ஹா பெயர் இல்லை என்றாலும், அவரை கைது செய்துள்ளனர்.
இதுவரை ஏன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை? எங்கள் வீட்டில் உள்ள வயதான தாய், சகோதரியையும் கைது செய்யுங்கள். என்னை ஒழிக்க நினைத்த நீங்கள், என் குடும்பத்தை ஒழிக்க முயற்சிக்கிறீர்கள். இதற்கு நான் அஞ்சமாட்டேன். உங்கள் குடும்ப அரசியல் தொடரட்டும்.
மக்களையும், ஊடகங்களையும் திசை திருப்ப, என்னை இழுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். பார்லிமென்டில் சமீபத்தில் நடந்த அத்துமீறலில் தொடர்புடையவர்களுக்கு, ‘பாஸ்’ வழங்கியதாக ஏற்கனவே பிரதாப் சிம்ஹா சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்நிலையில், மரம் வெட்டியதாக அவருடைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளது. இது கர்நாடக அரசியலில் பெரும் வார்த்தை போரை உருவாக்கியுள்ளது.