ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது முஸ்லிம் நபர் ஒருவர், 16 வயதான முஸ்லிம் சிறுமியை திருமணம் செய்துகொண்டார். இந்திய சட்டத்தின்படி இது குழந்தைத் திருமணம் என்பதால், ஹரியானா அரசு அந்தப் சிறுமியை குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் தங்க வைத்தது. இதை எதிர்த்து அந்த சிறுமியின் கணவர் சென்ற ஆண்டு ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த ஹரியானா நீதிமன்றம், “15 வயது நிறைவடையும் முஸ்ளிம் சிறுமிகள், அந்த மதத்தின்படி பருவமெய்தியப் பெண் ஆவார். அவர்களின் சட்டப்படி, அவர் தான் விரும்பிய நபரை திருமணம் செய்து கொள்ளலாம். இது இந்திய குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தை மீறுவது ஆகாது” என்று தீர்ப்பளித்தது. தற்போது இந்திய சட்டத்தின்படி, 18 வயதுக் குட்பட்ட பெண்கள் திருமணம் செய்வது சட்டவிரோதம். மேலும், மத்திய அரசு பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18ல் இருந்து 21 வயதாக உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 2021ம் ஆண்டில் இதற்கான மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்திருந்தது. நாடெங்கும் தற்போது பொதுசிவில் சட்டம் தேவை என்ற கருத்து வலுப்பெற்று வரும் சூழலில், இந்தத் தீர்ப்பு தேசமெங்கும் பெரும் விவாதப்பொருள் ஆனது. இந்த தீர்ப்பை எதிர்த்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துகொள்ள தற்போது உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளதுடன் இந்த வழக்குத் தொடர்பாக சம்பந்தப்பட்டத் தரப்புகள் பதில் அளிக்க நோட்டீசும் அனுப்பியுள்ளது.