எத்தனால் என்ற பொருளை பெட்ரோல் உடன் 20% வரை கலந்து பயன்படுத்தினால், எரிபொருளுக்காக பாரதம் வெளிநாடுகளை எதிர்பார்த்து இருக்க வேண்டிய கட்டாயத்திலிருந்து மெல்ல விடுபடும். அது மட்டும் அல்ல, பல விதத்திலும் பொருளாதாரத்திற்கு ஆதாயம் கிட்டும்.
ஒரு புள்ளி விவரத்தைப் பார்ப்போம். ஆண்டு 2022ல், 12 சதவீதம் எத்தனால் கலந்த போது பெட்ரோல் இறக்குமதி குறைந்ததால், பாரதத்திற்கு 23,400 கோடி ரூபாய் அந்நிய செலாவணி லாபமாயிற்று. 2023ல், எத்தனால் 15 சதவீதம் ஆனபோது கிடைத்த லாபம் 35,000 கோடி ரூபாய். 2025ல் எத்தனால் 20% ஆனபோது அந்நிய செலாவணி மிச்சமான வகையில் லாபம் 45,000 கோடி ரூபாய். பெட்ரோலுக்காக வெளிநாட்டுக்கு நமது பணம் போவது குறைகிறது என்பதுடன் சாலை அகலப்படுத்துதல், மருத்துவமனை கட்டுதல் என்று எத்தனையோ வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிட பணம் கைவசம் கிடைக்கிறது. எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்துங்கள் என்று பிரச்சாரம் செய்யப் போனால், விவசாயியின் வயிற்றில் அடிக்காதீர்கள் என்று யாரும் கூக்குரலிட முடியாது.
எத்தனால் உற்பத்தியில் கரும்புச்சக்கை, அறுவடையான வயலில் எரிக்கப்படும் அடிக்கட்டை வைக்கோல், சேமிப்புக் கிடங்கில் சேதாரமான அரிசி போன்றவை தான் பயன்படுவதாக சொல்கிறார்கள். அதாவது வீணாகும் பண்டத்தை விற்றுக் காசாக்கி விவசாயி அதிக வருமானம் பார்ப்பாரே தவிர, இந்த வகையில் அவர் இழப்பதற்கு எதுவும் இல்லை. பொதுவாக சாலை அகலப்படுத்தப் போனால், விளைநிலம் பறிபோகிறது என்ற எதிர்ப்புக்குரல் கேட்பது போன்ற நிலவரம் எத்தனால் விஷயத்தில் இல்லை. பெரிதும் விவசாய கழிவுகளில் இருந்து எத்தனால் உற்பத்தியாவதால், விவசாய தேசமாகிய பாரதத்தில் கிராமப்புற பொருளாதாரம் மேம்படும்.
உலகையே அச்சுறுத்தும் போக்குவரத்து புகை மாசு குறைவதற்கும், எத்தனால் கலந்த பெட்ரோல் உதவும். பெட்ரோலை விட எத்தனால் எரிவதால் வெளியாகும் புகையில் ‘கிரீன் ஹவுஸ்’ எனப்படும் மாசுபட்ட வாயு குறைவு என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.
பாரதத்தில் பெட்ரோலில் 20% அளவுக்கு மட்டுமே எத்தனால் கலந்து விற்க முயற்சி நடக்கிறது. உலகின் பல நாடுகளில் எத்தனையோ ஆண்டுகளாக 85 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலில் வாகனங்கள் ஓடுகின்றன. அதாவது வாகனங்களுக்கு எத்தனால் கலந்த பெட்ரோலால் பாதிப்பு இல்லை என்று தெரிய வருகிறது. எனவேதான் பல நோக்கு ஆதாயத்தை கருத்தில் கொண்டு, பாரத அரசு எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்த வாகன உரிமையாளர்களை ஊக்குவித்து வருகிறது. தோள் கொடுப்போம்.