மதன்லால் திங்க்ரா

மதன்லால் திங்க்ராவின் இறுதி அறிக்கை இங்கிலாந்தில் இருந்து பாரதத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால், அன்றைய பாரத அரசு அதனைத் தடை செய்தது. “சவால்” எனும் தலைப்பில் வெளியான அந்த அறிக்கையில் சில:

அன்னியத் துப்பாக்கிகளால் அடக்கப்பட்டிருக்கும் ஒரு தேசமானது நிரந்தரப் போரில் ஈடுபட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். நிராயுதபாணிகளாக்கப்பட்ட ஒரு தேசத்துக்கு வெளிப்படையான யுத்தம் சாத்தியமில்லை. எனவே, நான் எதிர்பாராத நேரத்தில் தாக்கினேன்.

நான் கருணையை யாசிக்கப்போவதில்லை. உங்களுக்கு என் மீது எந்த அதிகாரமும் இல்லை. பாரதத்தை இங்கிலாந்து ஆள முடியாது; ஆளக்கூடாது. நான் அன்று ஆங்கில ரத்தத்தை சிந்த வைத்தேன். அது நான் என் பாரத தேசத்தின் தேசபக்த இளைஞர்களுக்கு தூக்குத் தண்டனை, நாடு கடத்தல் தண்டனைகளை அளித்து வந்தமைக்கான ஒரு எளிய பழிவாங்கும் முயற்சியே. இம்முயற்சியில் நான் என் மனசாட்சியைத் தவிர வேறு எவராலும் தூண்டப்படவில்லை. நான் என் கடமையை செய்தேன். எவருடனும் சதியாலோசனை செய்யவில்லை.

ஒரு ஹிந்து என்ற முறையில் என் தேசத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம் என் தெய்வத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம். என் தேசத்தாயின் சேவை ஸ்ரீராமனின் சேவை. அவளுக்கு செய்யப்படும் சேவை ஸ்ரீகிருஷ்ணனுக்குச் செய்யப்படும் சேவை. புத்தி பலத்திலும் உடல் பலத்திலும் சக்தியில்லாத என்னைப் போன்ற ஒரு மைந்தன் என் அன்னைக்கு என் உதிரத்தைத் தவிர வேறு எதைத் தந்துவிட இயலும்? எனவே என் ரத்தத்தை அவள் சந்நிதியில் நான் சமர்ப்பித்தேன்.

இறைவனிடம் என் ஒரே பிரார்த்தனை இதுதான். நான் என் தேசத்துக்காக மீண்டும் இதே தேச அன்னைக்குப் பிறப்பேனாக. மீண்டும் இதே புண்ணிய கைங்கரியத்தில் மரணத்தைத் தழுவுவேனாக. உலக மானுடம் அனைத்துக்கும் அவள் நன்மையை அருளவும், ஈஸ்வரனின் மகோன்னதத்தை பிரகடனப்படுத்தவும், அவள் விடுதலையை அடையும்வரை நான் மீண்டும் மீண்டும் பிறந்து இதே கைங்கரியத்துக்காக மரணத்தைத் தழுவுவேனாக. இன்று என் பாரத தேசம் படித்துக்கொள்ள வேண்டிய ஒரே பாடம் எப்படி தேசத்துக்காக மரணத்தை ஏற்றுக்கொள்வது என்பதுதான். அதனை கற்பிக்க ஒரே வழி, நாமே அந்தப் பாதையை ஏற்று வழிகாட்டுவதுதான். எனவே நான் மரணத்தை ஏற்றுக்கொள்கிறேன் அந்தப் பிராண தியாகத்தில் பிரகாசிக்கிறேன்.

வந்தே மாதரம்.