பாரதத்தின் முதல் சுதந்திரப் போர் என்று அறியப்பட்ட 1857 சிப்பாய் கலகம், பாரத விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவர் மங்கள் பாண்டே என்ற சிப்பாய். மங்கள் பாண்டே 1827ல் உத்தரப் பிரதேசத்தில், ஒரு சிறிய கிராமத்தில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.
1849ல் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில், சிப்பாயாக சேர்ந்தார். மார்ச் 29, 1857இல் என்ன நடந்தது என்று பலவிதமான கருத்துக்கள் உள்ளன. மங்கள் பாண்டே இரண்டு பிரிட்டிஷ் அதிகாரிகளைக் கொன்றும், ஒரு கலகத்தை உண்டாக்குமாறு தன்னுடன் இருந்த சிப்பாய்களை கேட்டுக் கொண்டதாகவும், பிடிபட்டபோது தற்கொலைக்கு முயன்றதாகவும் பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. பிறகு ஏப்ரல் 18ல் அவரைத் தூக்கிலிடும் தண்டனை வழங்கப்பட்டது. இது போல கலகங்கள் உண்டாகலாம் என்று அஞ்சிய பிரிட்டிஷ் அரசு 10 நாட்களுக்கு முன்பாக அவருடைய தூக்கு தண்டனையை நிறைவேற்றியது. விடுதலைப் போரில் ஈடுபடும் எந்த சிப்பாயையும் ‘பாண்டே’ என்றே அழைக்கும் அளவுக்கு அவரின் பெயர் பிரிட்டிஷார் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. தன் 29ஆவது வயதில் இந்திய வரலாற்றில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடந்த ஒரு மிகப்பெரிய கலகத்தை ஆரம்பித்து வைத்துவிட்டு அவர் உயிரிழந்தார்.
இப்போதும்கூட இந்த நிகழ்ச்சிகளை பற்றிய வரலாற்று கட்டுரைகளை படிக்கும்போது, பசு மற்றும் பன்றிக் கொழுப்பு தடவிய தோட்டாக்கள் மட்டுமே அந்தப் புரட்சிக்கு ஒரே காரணம் என்பது போல் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் இதை மறுக்கும் சாவர்க்கர், தனது ‘இந்திய சுதந்திரப் போர்’ புத்தகத்தில், பிரிட்டிஷ் ஏகாதிபதியத்துக்கு எதிரான புரட்சியில் ஒரு தீப்பொறி தான் அந்த ‘வதந்தி’ என்றும், சிப்பாய்க் கலகம் அந்தத் தீப்பொறி இல்லையென்றாலும், வேறொன்றைக் காரணமாக வைத்து நடந்திருக்கும் என்று வாதிடுகிறார். இதைக் கருத்தில் கொண்டு மங்கள் பாண்டேவின் செயல்களை பார்ப்பது நலம்.