கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த நவம்பர் 19-ம் தேதி முகமது ஷாரிக் (25) என்பவர் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இதில் ஆட்டோ ஓட்டுநரும், முகமது ஷாரிக்கும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சுமார் ஓராண்டு விசாரித்த பிறகு நேற்று மங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் முகமது ஷாரிக், சையத் ஆகிய இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்தக் குற்றப்பத்திரிகையில், “முகமது ஷாரிக், சையத் யாசின் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் கர்நாடகாவை மையமாகக் கொண்டு ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை மூளை சலவை செய்து தீவிரவாத அமைப்பில் சேர்த்துவிடுவது, நிதி திரட்டுவது, ஆதரவாளர்களை உருவாக்குவது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் மூலம் 2022-ம் ஆண்டு ஷிமோகா போலீஸார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மங்களூரு கத்ரி மஞ்சுநாத சுவாமி கோயிலில் குண்டுவெடிப்பு நிகழ்த்த திட்டமிட்டனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் அவர்களுக்கு வெவ்வேறு வகையில் உதவி செய்துள்ளனர். அச்சுறுத்தும் வகையில் குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக வெடித்தது” என என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.