மக்களை பயமுறுத்த காங்கிரஸ் முயற்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ஒடிசா மாநிலம் கந்தமாள் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: அணுகுண்டு சோதனை உலகெங்கும் உள்ள இந்தியர்களை பெருமையில் ஆழ்த்தியது. நான் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அதனால் ஏழை மக்களின் வாழ்க்கை நிலைமையை உயர்த்துவதற்காக நான் அயராது உழைக்கிறேன். 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீள நான் உதவியுள்ளேன். ஏழைகள் அனைவரும் முன்னேறும் வரை நான் நிம்மதியாக இருக்க மாட்டேன்.

ஒடிசாவில் என்னென்ன பணிகள் நடக்கின்றன என்று டில்லியில் தினமும் கண்காணிக்கப்படுகிறது. பாகிஸ்தானிடம் அணுகுண்டுகள் இருப்பதாகச் சொல்லி எச்சரிக்கையுடன் நடக்கச் சொல்கிறார்கள். காங்கிரஸ் எப்போதும் மக்களை பயமுறுத்த முயற்சிக்கிறது. இந்தியர்களின் மனதில் அச்சத்தை உருவாக்குகிறார்கள். எப்போதும் இதை தான் காங்கிரஸ் செய்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஜம்மு காஷ்மீர் மக்கள் 60 ஆண்டுகளாக பயங்கரவாதத்தை எதிர்கொண்டனர்.

காங்கிரசார் பயங்கரவாதிகளுடன் சந்திப்பு நடத்தியதை தேசம் ஒருபோதும் மறக்காது. லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். ஜூன் 4ம் தேதி நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். ஒடிசாவை வளர்ந்த மாநிலமாக மாற்ற அனைத்தையும் செய்வேன். ஒடிசாவில் முதல்முறையாக பா.ஜ., ஆட்சி அமையும். நவீன் பட்நாயக் நீண்ட காலமாக முதல்வராக இருந்ததால் அவருக்கு சவால் விட விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.