மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி – காங்கிரஸ் மோதல் நாளுக்கு நாள் வலுத்துவருகிறது. மறைமுகமாக பாஜக தலைமையிலான இண்டியா கூட்டணியை வலுவானதாக முன்னிறுத்துகிறது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அண்மைப் பேச்சு அவருடைய கட்சிக்கும் காங்கிரஸுக்குமான பூசலை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. முன்னதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சுமுகத் தீர்வு எட்டபப்டும்” என்று கூறியிருந்த நிலையில் மம்தா இவ்வாறு பேசியுள்ளார்.
வெள்ளிக்கிழமை ஒரு தர்ணாவில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி பேசுகையில். “இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்குவங்கத்தின் 6 மாவட்டங்களில் பயணித்துள்ளது. அது வெறும் போட்டோ ஷூட் வாய்ப்பு. மாநிலத்தில் சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரித்தாள்வதற்காக வந்த புலம்பெயர் பறவைகள் அவர்கள்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 300 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று நான் முன்மொழிந்தேன். ஆனால் அவர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை. இப்போது இங்கு மேற்குவங்கத்தில் முஸ்லிம் வாக்குகளைக் குறிவைத்து பயணிக்கின்றனர். இப்போதைய நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் அவர்கள் 40 தொகுதிகளையாவது கைப்பற்றுவார்களா என்று சந்தேகப்படுகிறேன்.
நாங்கள் கூட்டணி விசயத்தை திறந்த மனதோடு தான் அணுகுகிறோம். அவர்களுக்கு 2 தொகுதிகள் தர முன்வந்தோம். ஆனால் அவர்கள் உடன்படவில்லை. இப்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக எங்களுக்குள் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை. நாங்கள் இனி மேற்குவங்கத்தில் தனியாகப் போட்டியிட்டு பாஜகவ வீழ்த்துவோம்” என்றார்.