திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ திரவஇயக்க உந்தும வளாகத்தில், ஒருங்கிணைந்த செமி கிரையோஜெனிக் இன்ஜின் சோதனைக் கூடம் ரூ.800 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதை, திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இஸ்ரோ மகேந்திரகிரி மையத்தில் கிரையோஜெனிக் இயந்திரங்கள் பல்வேறு கட்டங்களாகசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இந்த சோதனைக்குப் பின்னரே ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்துக்கு இவை கொண்டு செல்லப்படுகின்றன. விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக் கோள்களின் எடையை அதிகரிக்கும் வகையிலும், கிரையோஜெனிக் இயந்திரங்களின் திறனை அதிகரிக்கும் வகையிலும் பல்வேறு ஆய்வுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், திரவ ஆக்சிஜன் மற்றும் ராக்கெட்டில் பயன்படுத்தும் தரமுள்ள மண்ணெண்ணெயை ஒருங்கிணைத்துப் பயன்படுத்தும் வகையிலான, 200 டன் எடையுள்ள செமி கிரையோஜெனிக் இன்ஜினை, திருவனந்தபுரம் அருகேவலியமாலாவில் உள்ள இஸ்ரோதிரவ இயக்க உந்தும வளாகத்தில் விஞ்ஞானிகள் உருவாக்கிஇருக்கிறார்கள்.
இந்த இன்ஜினைப் பரிசோதிக்கும் சோதனைக் கூடம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ரூ.800 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனைக் கூடத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்துள்ளார்.
இது தொடர்பாக வலியமாலா இஸ்ரோ திரவ இயக்க உந்தும வளாக இயக்குநர் முனைவர் வி.நாராயணன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:
செமி கிரையோஜெனிக் இன்ஜின்- 200 என்பது 2 எம்.என்.திரஸ்ட் கிளாஸ் லிக்விட் ராக்கெட் இன்ஜினாகும். இது இஸ்ரோவின் தற்போதைய எல்விஎம்-3 மற்றும்வரவிருக்கும் ஹெவி மற்றும் சூப்பர்ஹெவி- லிப்ட் ராக்கெட்டுகளைஏவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
திரவ ஆக்ஸிஜன் மற்றும் ராக்கெட்டில் பயன்படுத்தும் தரமுள்ளமண்ணெண்ணெய் ஆகியவற்றை இதற்காகப் பயன்படுத்துகிறோம். இதனால் ராக்கெட்டின் திறன் அதிகரிக்கும். இது இஸ்ரோவின் அடுத்த கட்ட வளர்ச்சியாகும். இவ்வாறு அவர் கூறினார்.