சக்தி வழிபாட்டின், பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள் தான். குளிர்கால (புரட்டாசி மாதம்) ஆரம்பமும், கோடை கால (பங்குனி மாதம்) ஆரம்பமும் எமனின் இரு தாடைகளாக விளங்குவதாக அக்னி புராணம் கூறுகிறது. அந்த இரு தாடைகளிலும் படாமல், அந்த இரு மாதங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, நீண்ட நல்வாழ்வு வாழ அருளக் கூடியவள் அம்பிகை மட்டுமே.
புரட்டாசி குளிர் கால ஆரம்ப மாதம். பங்குனி மாதம் கோடையின் துவக்க காலம். இந்த இரு காலங்களுக்குள் அமையும் நவராத்திரிகள் நன்மை பயக்கும் விதத்தில் அமைந்துள்ளன. ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமி வரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியனதான். பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள். அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமானவை நான்கு நவராத்திரிகள்.
வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. ஆடி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி.
பெரும்பாலான இடங்களில் மிகப் பிரசித்தமாகக் கொண்டாடப்படுவது இம்மாதம் தற்போது நாம் கொண்டாடி வரும் இந்த சாரதா நவராத்திரிதான். வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக இந்த சாரதா நவராத்திரி தவிர வேறு விரத விழா இல்லை. இந்த சாரதா நவராத்திரி போக நவராத்திரி எனும் மகிழ்வைக் கொடுக்கக் கூடிய நவராத்திரியாகும். வசந்த நவராத்திரி யோகம் எனும் பக்தி நிலையை தரக் கூடியது.
வசந்த நவராத்திரி அம்பிகையின் வடிவமாகிய ராஜச்யாமளா (ராஜமாதங்கீஸ்வரி) எனும் வடிவத்தைப் போற்றுவதாக அமையக் கூடியது. மதுரை அரசாளும் மீனாக்ஷி அந்த ராஜஷ்யாமளாவாக விளங்குகின்றாள். ஆலயங்களில் மேரு எனும் ஸ்ரீ சக்ர வடிவம் இருக்குமேயானால், அங்கு வஸந்த நவராத்திரி பொதுவாகக் கொண்டாடப்படும். மதுரை மீனாக்ஷி ஆலயத்திலும் வசந்த நவராத்திரி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஆறாவது நாள்: நவராத்திரியின் ஆறாவது நாளான இன்று, நாம் வழிபட வேண்டிய அம்பிகை, கௌமாரி. இவள் முருகனின் சக்தி என்பதால், கௌமாரி என்று அழைக்கப்படுகிறாள். இன்றைய தினம் ஏழு வயதுள்ள பெண் குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு அழைத்து, அவர்களை ‘காளிகா’ தேவியாக வழிபட வேண்டும். இன்று பேரி வாசிக்கத் தெரிந்தவர்கள் நீலாம்பரி ராகத்தில் இசைப்பது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இன்று தேங்காய் சாதமும், ஏதேனும் ஒரு நவதானியத்தின் உதவிகொண்டு சுண்டலும் செய்து அம்பிகைக்கு நைவேத்யம் செய்து, அனைவருக்கும் பிரசாதமாகக் கொடுக்க வேண்டும். அம்பிகையை தும்பைப் பூவால் இன்று அர்ச்சனை செய்வது மேலும் சிறப்பான பலனைத் தரும்.