‘பொருளாதாரத்தை சரி செய்யாமல் பஞ்சப்பாட்டு பாடுது தி.மு.க., அரசு’

 

”தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்த தி.மு.க., அரசிடம் எந்த திட்டமும் இல்லை. பொருளாதாரத்தை சரி செய்யாமல் பஞ்சப்பாட்டு பாடுவதே அரசின் செயலாக உள்ளது,” என பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

சேலம் மாமாங்கத்தில் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: பொங்கல் தொகுப்புடன் சேர்த்து 1000 ரூபாய் வழங்குவதாக தி.மு.க., அரசு அறிவித்துள்ளது. இதற்கு நிதி நிலையை காரணம் காட்டியுள்ளது. அதே முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது 5000 கொடுக்க வேண்டும் என்றார்; தற்போது 1000 ரூபாய் கொடுக்கிறார்.தமிழக ஒட்டுமொத்த கடன் தொகை 8.23 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் 40 சதவீதம், தி.மு.க., ஆட்சியில் மட்டும் வாங்கப்பட்டுள்ளது.

 

தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்த தி.மு.க., அரசிடம் எந்த திட்டமும் இல்லை. பொருளாதாரத்தை சரி செய்யாமல் பஞ்சப்பாட்டு பாடுவதே தி.மு.க., அரசின் செயலாக உள்ளது. இந்திய அளவில் மிக குறைந்த முதலீடு தமிழகத்துக்குத் தான் வந்துள்ளது. முதல்வர் துபாய் சென்று வந்த பின் 6000 கோடி ரூபாய் முதலீடு இன்னும் வரவில்லை. இதில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வரும் என்பதை ஏற்க முடியாது.

 

சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது விவகாரத்தில் என்னை விசாரணைக்கு அழைத்தால் சந்திக்க தயார். இன்னும் பல ஆவணங்கள் என்னிடம் உள்ளன. இதில் தொடர்புடைய அனைத்து போலீஸ் அதிகாரிகளையும், வம்பிழுக்க தயாராக உள்ளேன். லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, மத்திய குழு முடிவெடுத்து அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.