கிறிஸ்தவ மதத்தின் பெந்தகோஸ்தே பிரிவை சேர்ந்த மதபோதகர் ராஜ்குமார் யேசுதாசன் என்பவர், நவி மும்பையில் உள்ள பெத்தேல் நற்செய்தி பெந்தகோஸ்தே சர்ச்சால் நடத்தப்படும் குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருந்த மூன்றுக்கும் மேற்பட்ட சிறுமிகளை அவர் பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தானே மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கு வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் குழு அங்கு சென்று விசாரணை மேற்கொண்டது. அப்போது அங்கு 3 முதல் 18 வயதுக்குட்பட்ட 12 பெண் குழந்தைகள் மற்றும் 33 ஆண் குழந்தைகள் என மொத்தம் 45 பேர் இரண்டு சிறிய சுகாதாரமற்ற அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதை அவர்கள் கண்டறிந்தனர். அங்குள்ள சிறுமிகள் ராஜ்குமார் யேசுதாசன் செய்த பாலியல் அத்துமீறல்கள், துஷ்பிரயோகங்கள், துன்புறுத்துதல்கள் குறித்து புகார் தெரிவித்தனர். மேலும், யேசுதாசனின் மனைவியும் அதற்கு உடந்தையாக இருந்ததையும் கூறினர். இதனையடுத்து அந்த 45 குழந்தைகளும் அரசின் பாதுகாப்பு இல்லங்களிலும் அவர்களது பெற்றோர், உறவினரிடமும் ஒப்படைக்கப்பட்டனர். இந்த குழந்தைகள் ராஜஸ்தான், ஒடிசா, தமிழகம், பந்தர்பூர், மும்பை மற்றும் தானேவைச் சேர்ந்தவர்கள். அங்குள்ள கிறிஸ்தவ சர்ச்சுகள் மூலம் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டவர்கள். குழந்தைகளின் உறவினர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே குழந்தைகளை சந்திக்க முடியும் என்று கண்டிப்புடன் கூறிய பெத்தேல் நற்செய்தி பெந்தகோஸ்தே அமைப்பினர், இதுகுறித்து புகார் அளித்தால், கேள்வி கேட்டால், இறந்த பிறகு புதைக்க நிலம் கிடைக்காது என்றும் அச்சுறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.