நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், கேரள மாநிலம் திருச்சூரில் அம்மாநில பாஜக சார்பில், ‘மோடி மூலம் பெண்களுக்கு அதிகாரம்’ என்ற தலைப்பில் பிரம்மாண்ட மாநாடு நேற்று நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருச்சூரின் குட்டநல்லூருக்கு சென்ற அவர்,அங்கிருந்து மாநாடு நடைபெற்ற இடத்துக்கு வாகனத்தில் ஊர்வலமாக சென்றார். அவருடன் மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் இருந்தார். அப்போது சாலையில் இருபுறமும் கூடியிருந்த பொதுமக்கள் பிரதமர் மோடி மீது மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த மாநாட்டில், அங்கன்வாடி ஆசிரியர்கள், ஆஷா பணியாளர்கள், தொழில்முனைவோர், கலைஞர்கள், 100 நாள் வேலை உறுதி திட்ட பயனாளிகள், சமூகஆர்வலர்கள் உள்ளிட்ட சுமார்2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள்கலந்து கொண்டனர். இதில் பிரதமர்மோடி தனது உரையை தொடங்குவதற்கு முன்பு மலையாள மொழியில் பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:
நாட்டின் சிறந்த ஆசிரியர் வேலுநாச்சியார் மற்றும் சமூக ஆர்வலர்சாவித்ரிபாய் புலே ஆகியோரின்பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். இவர்கள் பெண்களின் திறமையை நமக்கு எடுத்துரைத்தனர்.
கேரளாவைச் சேர்ந்த ஏ.வி.குட்டிமாலு அம்மா, அச்சம்மா செரியன், சோசம்மா புன்னூஸ் உள்ளிட்ட பெண்கள் நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்கு புதிய ஆற்றலை கொடுத்தனர். சுதந்திரத்துக்குப் பிறகு கேரளாவில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் இடதுசாரிகள் ஜனநாயகக் கூட்டணியும், ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியும் பெண்களின் சக்தியைபுறக்கணித்தன. குறிப்பாக மத்தியில் இவர்கள் ஆட்சியில் இருந்தபோதும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கிடப்பில் போட்டனர். இந்த மசோதாவை நிறைவேற்றுவேன் என உறுதி அளித்தேன். அதன்படி, பெண்களின் நலன் கருதி நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி என் வாக்குறுதியை நிறைவேற்றினேன்.
கடந்த 10 ஆண்டு கால ஆட்சி யில் பெண்களின் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக உஜ்வாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 10 கோடி பேருக்கு இலவசசமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 11 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்புவழங்கப்பட்டுள்ளது. 12 கோடிகழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
லட்சத்தீவுக்கு ரூ.1,150 கோடி: பிரதமர் நரேந்திர மோடி நேற்றுகாலையில் லட்சத்தீவுகள் யூனியன்பிரதேச தலைநகர் கவரட்டி சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1,156 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மத்தியில் பல ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் தங்கள் சொந்த கட்சியின் வளர்ச்சிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்தனர்.
மாநிலங்கள், எல்லைப் பகுதிகள் அல்லது தீவுப் பகுதிகள் மீது முந்தைய ஆட்சியாளர்கள் போதிய கவனம் செலுத்தவில்லை. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் அரசு எல்லைப் பகுதிகள் மற்றும் தீவுப் பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கி உள்ளது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.